பாகிஸ்தானில் கடந்த 8-ந்தேதி நாடாளுமன்ற தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது. இந்த தேர்தல் நிறைவடைந்ததும், வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. அந்நாட்டு நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 336 இடங்களில் 266 இடங்கள் மட்டும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுபவை ஆகும்.
எஞ்சிய 70 இடங்கள் வெற்றி பெற்ற கட்சிகளின் பெரும்பான்மைக்கு ஏற்ப பகிர்ந்தளிக்கப்படும். ஒட்டுமொத்தமாக 169 இடங்களை கைப்பற்றும் கட்சியே ஆட்சியில் அமரும். இந்த தேர்தலில், சிறையில் அடைக்கப்பட்டு உள்ள இம்ரான் கானின் ஆதரவாளர்கள் பலரும் சுயேச்சையாக போட்டியிட்டு உள்ளனர்.
அவருடைய கட்சி தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்ட சூழலில், அவருடைய தொண்டர்கள் சுயேச்சைகளுக்கு ஆதரவு தெரிவித்தனர். தேர்தலில், எந்தவொரு கட்சியும் தனிப்பெரும்பான்மை வெற்றியை பெறாது என அரசியல் நிபுணர்கள் முன்பே கணித்திருந்தனர். இந்நிலையில், 265 தொகுதிகளில் 4-ல் 3 பங்கு தேர்தல் முடிவுகள் பற்றிய அறிவிப்பு வெளியானது.
இந்த சூழலில், அந்நாட்டின் முன்னாள் பிரதமர்களான இம்ரான் கான் மற்றும் நவாஸ் ஷெரீப் இருவரும் தங்களுடைய கட்சியினர் தனிப்பெரும்பான்மையுடன் தேர்தலில் வெற்றி பெற்றிருக்கின்றனர் என அறிவித்துள்ளனர்.
இதுபற்றி 3 முறை பிரதமராக பதவி வகித்தவரான 74 வயதுடைய ஷெரீப், லாகூரில் வீட்டுக்கு வெளியே கூடியிருந்த தொண்டர்களிடம் பேசும்போது, நாட்டில், பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் கட்சியானது தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து உள்ளது. குழப்பத்தில் இருந்து நாட்டை வெளியே கொண்டு வருவது நம்முடைய கடமை.
வெற்றி பெற்றவர்கள் சுயேச்சைகளோ அல்லது கட்சிகளோ, தேர்தல் முடிவுகளை நாம் மதிக்க வேண்டும். அவர்களை எங்களுடன் அமர்ந்து பேச வரும்படி நாங்கள் அழைக்கிறோம். பொருளாதார சரிவில் சிக்கியுள்ள நாட்டை சொந்த காலில் நிற்க செய்வதற்கு உதவ முன் வரவேண்டும் என அவர்களை அழைக்கிறோம் என்று அவர் பேசியுள்ளார். பெரும்பான்மை பெற தவறிய நிலையில், கூட்டணி அரசை உருவாக்குவதற்காக பிற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட கூடும் என்றும் கூறினார்.
இதேபோன்று, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வழியே, இம்ரான் கான் (வயது 71) பேசியது போன்ற வீடியோ காட்சி ஒன்றை பி.டி.ஐ. கட்சியினர் வெளியிட்டு உள்ளனர். அது எக்ஸ் சமூக ஊடகத்தில் பகிரப்பட்டு உள்ளது. அதில்,
நீங்கள் அனைவரும் வாக்களிக்க வருவீர்கள் என நான் நம்பினேன். அந்த நம்பிக்கைக்கு நீங்கள் கவுரவம் அளித்திருக்கிறீர்கள். திரண்டு வந்து நீங்கள் வாக்களித்தது எல்லோரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
ஷெரீப்பின் பேச்சை யாரும் ஏற்கமாட்டார்கள். ஏனெனில் அவர் குறைந்த தொகுதிகளிலேயே வெற்றி பெற்றிருக்கிறார். தேர்தலில் மோசடியும் நடந்திருக்கிறது என பேசியுள்ளார்.
இந்த தேர்தலில், மெஜாரிட்டியுடன் பெற்றி வருவதே தன்னுடைய விருப்பம் என தெரிவித்த ஷெரீப், ஒரு வேளை அது கிடைக்காமல் போனால், பாகிஸ்தான் மக்கள் கட்சியுடன் சேர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் கூறினார்.
இதேபோன்று இம்ரான் கானின் மூத்த உதவியாளர் ஒருவர் கூறும்போது, பாகிஸ்தான் மக்கள் கட்சியுடன், எங்களுடைய கட்சியினர் பேச்சுவார்த்தை நடத்துவார்கள். சிறையில் கானை சந்தித்து இதுபற்றி பேசுவோம் என்றும் கூறினார்.
பாகிஸ்தானில் தேர்தல் முடிவுகள் முழு அளவில் அறிவிப்பதில் இதுவரை இல்லாத வகையில், தாமதம் ஏற்பட்டு உள்ளது. பாதுகாப்பை முன்னிட்டு, மொபைல் போன் சேவைகள் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளன.
சுயேச்சைகள் தனித்து ஆட்சியமைக்க முடியாது. ஆனால், தேர்தலுக்கு பின்னர் சுயேச்சைகள் பிற கட்சிகளுடன் சேர கூடிய வாய்ப்பு அவர்களிடம் உள்ளது. பாகிஸ்தானில் ஒரு வேளை கூட்டணி அரசு அமையும் என்றால், அது நிலையற்ற, பலவீனம் வாய்ந்த ஒன்றாக இருக்கும் என அரசியல் நிபுணர்கள் பார்க்கின்றனர்.