மத்திய கிழக்கு நாடான இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசா பகுதியை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே கடந்த ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி போர் வெடித்தது. இந்த போரில் இதுவரை 28 ஆயிரத்துக்கும் அதிகமான பாலஸ்தீனியரகள் உயிரிழந்துள்ளதாக காசா சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் காசாவின் மொத்த மக்கள் தொகையில் சுமார் 80 சதவீதத்திற்கும் அதிகமானோர் போர் காரணமாக தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் தெற்கு காசாவில் உள்ள ரபா நகரத்தில் அடைக்கலம் புகுந்துள்ளனர்.
இதனிடையே காசாவில் இஸ்ரேல் ராணுவம் வான்வழி மற்றும் தரைவழித் தாக்குதல்களை தொடர்ந்து நிகழ்த்தி வருகிறது. எகிப்து எல்லையில் அமைந்துள்ள ரபா நகரத்தில் ஹமாஸ் அமைப்பினர் பதுங்கியிருப்பதாகவும், அங்குள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டும் என்றும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், ரபா நகரத்தின் மீது இஸ்ரேல் ராணுவம் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதல்களில் 10 குழந்தைகள் உள்பட 28 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹமாஸ் அமைப்பை முழுவதுமாக அழிக்கும் வரை போர் நிறுத்தம் ஏற்படாது என நெதன்யாகு கூறி வருகிறார். அதேசமயம், போரில் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.