இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான ரவீந்திர ஜடேஜா பேட்டிங், பவுலிங், பீல்டிங் ஆகிய 3 துறைகளில் முக்கிய பங்காற்றி இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக்கொடுத்து வருகிறார். அந்த வகையில் உலக அரங்கில் மகத்தான ஆல் ரவுண்டர்களில் ஒருவராக போற்றப்படும் அவர் தற்சமயத்தில் 3 வகையான இந்திய அணியிலும் இன்றியமையாத வீரர்களில் ஒருவராக போற்றப்படுகிறார். ஆனால் தற்போது இவரது குடும்ப விவகாரம் குறித்த செய்திகள் ரசிகர்கள் மத்தியில் அதிகளவில் பேசப்படும் விஷயமாக மாறியுள்ளது.
அண்மையில் ஜடேஜாவின் தந்தை அளித்த ஒரு பேட்டியில் ஜடேஜாவின் மனைவி குறித்து ஏகப்பட்ட விமர்சனங்களை முன் வைத்திருந்தார். அதாவது ஜடேஜாவுக்கு திருமணம் நடந்த சில மாதங்களிலேயே தம்மை விட்டு பிரிந்து சென்றதாக அவருடைய தந்தை அனிருத்சிங் ஜடேஜா சமீபத்திய பேட்டியில் கூறியிருந்தார்.
குறிப்பாக ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா அவரை ஏதோ மாயம் செய்து பிரித்து சென்று விட்டதாகவும் அவர் கூறினார். அதனால் தற்போது ஒரே நகரத்தில் இருந்தும் ரவீந்திர ஜடேஜாவை தாம் பார்ப்பதில்லை பேசுவதில்லை அவரும் தம்மை அழைப்பதில்லை என்று அனிருத் சிங் தெரிவித்திருந்தார்.
இப்படி ஜடேஜாவின் தந்தை அளித்த பேட்டி அனைவரது மத்தியிலும் வைரலாகவே அதற்கு பதிலளித்திருந்த ஜடேஜா : என் தந்தை கூறியது அனைத்தும் முற்றிலும் பொய்யானது. இந்த பேட்டியை புறக்கணியுங்கள். என் மனைவி மீதான நன் மதிப்பை சீர்குலைக்கும் முயற்சிதான் இது. இந்த நிகழ்வு முற்றிலும் சித்தரிக்கப்பட்ட ஒன்று என சில கருத்துகளை வெளிப்படுத்தியிருந்தார்.
இந்நிலையில் ஜடேஜாவின் மனைவியான ரிவாபா ஜடேஜா ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்டிருந்தார். அப்படி அங்கு நடைபெற்ற அந்த செய்தியாளர்கள் சந்திப்பின்போது ஜடேஜாவின் தந்தை அனிருத் சிங் ஜடேஜா குறித்த கேள்வி ஒன்றினை ஒரு நிருபர் எழுப்பினார்.
அதனால் கோபம் அடைந்த ரிவாபா : ‘இங்கு என்ன காரணத்திற்காக வந்திருக்கிறோமோ அந்த காரணத்திற்கு சம்பந்தப்பட்ட கேள்விகளை மட்டுமே கேளுங்கள். மற்றபடி தனிப்பட்ட கேள்விகளை கேட்க வேண்டும் என்றால் நேரடியாக என்னை தொடர்பு கொண்டு பேசலாம்’ என ஆவேசமாக கூறினார்.