சட்டசபை தேர்தல் நடந்து வரும் 5 மாநிலங்களில் கடைசி மாநிலமாக, தெலங்கானாவில் வருகிற 30-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. ஒன்றுபட்ட ஆந்திராவில் இருந்து தனி மாநிலமாக பிரிந்தது முதலே கடந்த 2 முறையும் ஆட்சியை பிடித்த பாரதிய ராஷ்டிர சமிதி, அங்கு ஹாட்ரிக் வெற்றிக்காக போராடி வருகிறது. இதைப்போல பாஜக, காங்கிரஸ் கட்சிகளும் தெலங்கானாவில் வெற்றி பெற அயராது உழைத்து வருகின்றன. இதனால் மாநிலத்தில் மும்முனை போட்டி ஏற்பட்டு இருக்கிறது.
இந்த நிலையில், தெலங்கானா மாநிலத்தில் நடைபெற்று வந்த தேர்தல் பிரசாரம் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணியுடன் ஓய்கிறது. எனவே தலைவர்கள் அனைவரும் இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
பாரதிய ராஷ்டிர சமிதி, பாஜக, காங்கிரஸ் தலைவர்கள் மட்டுமின்றி மேலும் பல்வேறு தலைவர்களும் மாநிலம் முழுவதும் இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் தெலங்கானா தேர்தல் களத்தில் அனல் பறந்து வருகிறது.