Tuesday, December 24, 2024
Google search engine
Homeஇந்தியாஇன்று டெல்லிக்கு படையெடுக்கும் விவசாயிகள்: கைது நடவடிக்கையை தொடங்கிய போலீசார்

இன்று டெல்லிக்கு படையெடுக்கும் விவசாயிகள்: கைது நடவடிக்கையை தொடங்கிய போலீசார்

கடந்த 2020-ம் ஆண்டு, 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி எல்லைகளை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டத்தை தொடங்கினர்.

ஓராண்டுக்கு மேல் நீடித்த போராட்டத்தின் இறுதியில், வேளாண் விளைபொருட்களின் குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதிப்படுத்த சட்டம் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையுடன் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

ஆனால், 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்று, சம்யுக்தா கிசான் மோர்ச்சா, கிசான் மஸ்தூர் மோர்ச்சா ஆகிய விவசாய அமைப்புகள் இன்று (செவ்வாய்க்கிழமை) டெல்லி நோக்கி பேரணி நடத்த அழைப்பு விடுத்துள்ளன.

அதை ஏற்று, பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லிக்கு படையெடுக்க உள்ளதாக தெரிய வந்துள்ளது. பஞ்சாப் விவசாயிகள் மட்டும் 10 ஆயிரம் டிராக்டர்களில் செல்ல உள்ளனர்.

அதே சமயத்தில், விவசாயிகள் டெல்லி செல்வதை தடுக்க அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. டெல்லி எல்லை பகுதிகளான சிங்கு, திக்ரி, காசிப்பூர் ஆகியவற்றில் ஒரு மாத காலத்துக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளின் வாகனங்களை பஞ்சர் ஆக்கும்வகையில், சாலையில் ஆணிகள் பொருத்தப்பட்டுள்ளன. டெல்லி எல்லைகளில் கன்டெய்னர்கள், போலீஸ் வாகனங்கள், ராட்சத கான்கிரீட் தடுப்புகள், கூர்மையான ஒயர்கள், முள்கம்பிகள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. கன்டெய்னர்களை கொண்டுவர கிரேன்கள் மற்றும் பொக்லைன் எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.

எல்லை பகுதிகளில் 5 ஆயிரம் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். டெல்லி-ரோதக் சாலையில் துணை ராணுவப்படையினரும் நிறுத்தப்பட்டுள்ளனர். போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சிங்கு எல்லையில் முழு நேரமும் கண்காணிக்க தற்காலிக அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது.

டிரோன்கள் மூலமும் விவசாயிகள் நடமாட்டத்தை கண்காணித்து வருகிறார்கள். அரியானாவை ஒட்டியுள்ள கிராமப்புற சாலைகள் ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளன.

டெல்லி நகர போலீஸ் கமிஷனர் சஞ்சய் அரோரா, அரியானா மற்றும் உத்தரபிரதேசத்தை ஒட்டிய எல்லை பகுதிகளில் நேரில் சென்று ஏற்பாடுகளை பார்வையிட்டார். புறநகர் டெல்லி போலீஸ் துணை கமிஷனர் ஜிம்மி சிராம், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இதுபோல், அரியானா மாநில பா.ஜனதா அரசும் விவசாயிகள் பேரணியை முறியடிக்க அதிரடி நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

இதன்படி விவசாயிகளை கைது செய்யும் நடவடிக்கைகளை போலீசார் தொடங்கி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. கைது செய்யப்பட்ட விவசாயிகளை அடைப்பதற்காக, 2 விளையாட்டு மைதானங்கள் தற்காலிக சிறைகளாக மாற்றப்பட்டுள்ளன.

அம்பாலாவை ஒட்டிய ஷாம்பு எல்லையில் அரியானா மாநில அரசு தடுப்புகளை அமைத்துள்ளது. சிமெண்ட் சுவர்களை கட்டி வைத்துள்ளது.

காக்கர் ஆறு வழியாக விவசாயிகள் டிராக்டரில் செல்வதை தடுக்க ஆற்றுப்படுகையில் போலீசார் பள்ளங்களை தோண்டி போட்டுள்ளனர். கண்காணிப்பு பணிக்கு டிரோன்கள் பயன்படுத்தப்படுகின்றன.

இதனிடையே விவசாயிகளுடன் நேற்று மத்திய மந்திரிகள் சண்டிகரில் பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் 6 மணி நேரம் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் பேச்சுவார்த்தையில் எந்தவித உடன்பாடும் எட்டப்படவில்லை. இதனால் இன்று காலை 10 மணிக்கு திட்டமிட்டபடி விவசாயிகள் பேரணி நடத்தப்படும் என அதன் சங்கங்கள் அறிவித்துள்ளன.

 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments