இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான தத்தாஜிராவ் கெய்க்வாட் வயது மூப்பு பிரச்சினை காரணமாக குஜராத் மாநிலம் பரோடாவில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு கடந்த 12 நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று காலை மரணம் அடைந்தார்.
இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரரும், பயிற்சியாளருமான அன்ஷூமான் கெய்க்வாட்டின் தந்தையான தத்தாஜி ராவ் கெய்க்வாட் 1952-ம் ஆண்டு முதல் 1961-ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் இந்திய அணிக்காக 11 டெஸ்டில் ஆடி 350 ரன்கள் எடுத்துள்ளார். 1959-ம் ஆண்டு இங்கிலாந்து சுற்றுப்பயணத்துக்கான இந்திய அணியின் கேப்டனாகவும் இருந்துள்ளார்.
95 வயதான தத்தாஜிராவ் கெய்க்வாட் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடியவர்களில் அதிக வயதில் வாழும் இந்தியராக விளங்கினார். அவர் மரணம் அடைந்ததன் மூலம் தற்போது அதிக வயதில் வாழக்கூடிய இந்திய டெஸ்ட் வீரராக சென்னையை சேர்ந்த கோபிநாத் உள்ளார். அவருக்கு 93 வயது 349 நாட்கள் ஆகிறது.