கேரள மாநிலம் கோழிக்கோடு நெடுமண்ணூரில் உள்ள ஒரு பள்ளியில் நேற்று முன்தினம் இரவு பள்ளி மேலாளரின் மகன் ருதீஷின் தலைமையில் பா.ஜனதா கட்சியினர் முன்னிலையில் கணபதி ஹோமம் மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதை கண்டித்து அப்பகுதியை சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தொண்டர்களும், பொதுமக்களும் பள்ளிக்கு சென்று எதிர்ப்பு தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் இரு பிரிவினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
இந்தநிலையில் திருவனந்தபுரத்தில் பள்ளியில் நடந்த சம்பவம் குறித்து கேரள பொது கல்வித்துறை மந்திரி வி.சிவன் குட்டி கூறியதாவது:-
பள்ளியில் நடத்தப்பட்டதாக கூறப்படும் பூஜை குறித்து விசாரணை நடத்தப்படும். இதுதொடர்பாக விசாரணை நடத்தி விரைவாக அறிக்கை சமர்ப்பிக்க பொது கல்வித்துறை இயக்குனருக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.