சர்வதேச கால்பந்து சங்கம் (பிபா) அணிகளின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில் இந்திய அணி 15 இடங்கள் சரிந்து 117-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. கடந்த 7 ஆண்டுகளில் இந்திய அணியின் மோசமான தரநிலை இது தான்.
சமீபத்தில் நடந்த ஆசிய கோப்பை கால்பந்து போட்டியில் ஆஸ்திரேலியா, உஸ்பெகிஸ்தான், சிரியா ஆகிய அணிகளுக்கு எதிரான லீக்கில் ஒரு கோல் கூட அடிக்காமல் தோற்றதன் விளைவு, தரவரிசையிலும் இந்தியா பெரும் பின்னடைவை சந்தித்து இருக்கிறது.
ஆசிய கோப்பையை வென்ற கத்தார் 21 இடங்கள் முன்னேறி 37-வது இடத்தை பிடித்துள்ளது. தரவரிசையில் டாப்-10 இடங்களில் மாற்றமில்லை. உலக சாம்பியன் அர்ஜென்டினா முதலிடத்திலும், பிரான்ஸ் 2-வது இடத்திலும், இங்கிலாந்து 3-வது இடத்திலும், பெல்ஜியம் 4-வது இடத்திலும், பிரேசில் 5-வது இடத்திலும் நீடிக்கிறது.