வங்காளதேசத்துக்கு சென்றுள்ள டிம் சவுதி தலைமையிலான நியூசிலாந்து கிரிக்கெட் அணி 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
முன்னதாக இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் வங்காளதேசத்தில் நடைபெற்றது. இதில் நியூசிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. பின்னர் 50 ஓவர் உலகக்கோப்பை தொடரை கருத்தில் கொண்டு டெஸ்ட் தொடர் இந்த மாத இறுதியில் தொடங்க திட்டமிடப்பட்டிருந்தது.
இதன்படி வங்காளதேசம் – நியூசிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சிலெட் நகரில் இன்று காலை 9 மணிக்கு தொடங்குகிறது.
நியூசிலாந்து அணியில் கேன் வில்லியம்சன், ரச்சின் ரவீந்திரா, கான்வே, ஹென்றி நிகோல்ஸ், டேரில் மிட்செல் என்று தரமான பேட்ஸ்மேன்கள் இருந்தாலும் வங்காளதேசத்தின் சுழல் தாக்குதலை திறம்பட சமாளித்தால் மட்டுமே கணிசமாக ரன் சேர்க்க முடியும்.
வங்காளதேசஅணி நஜ்முல் ஹூசைன் ஷன்டோ தலைமையில் களம் இறங்குகிறது. உள்ளூரில் எப்போதும் வலுவாக காணப்படும் வங்காளதேசம் தனது ஆதிக்கத்தை நிலை நாட்ட முயற்சிக்கும். நியூசிலாந்துக்கு எதிராக 10-வது முறையாக டெஸ்ட் தொடரில் ஆடும் வங்காளதேசம் இதுவரை அந்த அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றதில்லை. வரலாறு படைக்க வங்காளதேசத்துக்கு இது அருமையான சந்தர்ப்பாகும்.
மேலும் இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்டது என்பதால் அந்த வகையிலும் இந்த போட்டி இரு அணிக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.