இந்தியாவில் நடத்தப்படும் உள்ளூர் டி20 தொடரான ஐபிஎல்-ன் 17-வது சீசன் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக அந்த சீசனுக்கான வீரர்கள் ஏலம் அடுத்த மாதம் 19-ந்தேதி துபாயில் நடக்க உள்ளது. இதையொட்டி விடுவிக்கப்பட்ட மற்றும் தக்கவைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை அணி நிர்வாகங்கள் வெளியிட்டன.
சில அணிகள் தாங்கள் விரும்பும் வீரர்களை மற்ற அணிகளிடமிருந்து டிரேடிங் முறையில் வாங்கி அதற்கான அறிவிப்புகளை வெளியிட்டன. அதில் குறிப்பாக குஜராத் அணியின் கேப்டனாக செயல்பட்ட ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியது.
இந்நிலையில் குஜராத் அணியின் புதிய கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். கேப்டனாக நியமிக்கப்பட்டது குறித்து சுப்மன் கில் கூறியதாவது ,
ஒரு அணிக்கு கேப்டனாகும்போது பல்வேறு பொறுப்புகள் நமக்கு வந்துவிடும். அர்ப்பணிப்புடன் இருப்பது, கட்டுப்பாடுடன் இருப்பது, கடினமாக உழைப்பது, அணிக்கு விஸ்வாசமாக இருப்பது. இவையெல்லாம் ஒரு கேப்டனின் முக்கியமான தேவைகள். மேலும் நான் சிறந்த கேப்டன்களுக்கு கீழ் விளையாடியதாகவும் அவர்களிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டதாகவும் நினைக்கிறேன். அவர்களின் கீழ் விளையாடிய அனுபவத்திலிருந்து நான் பெற்ற அந்த கற்றல் எனக்கு மிகவும் உதவும் என்று நினைக்கிறேன்.
இவ்வாறு கில் கூறினார்.