மகளிர் பிரீமியர் லீக் தொடருக்கான இரண்டாவது சீசன் நாளை மறுநாள் (வெள்ளிக் கிழமை) தொடங்கவுள்ளது. மகளிர் பிரீமியர் லீக் தொடர் மார்ச் 17ம் தேதி வரை நடக்க உள்ளது. கடந்த முறை மும்பையில் உள்ள மைதானங்களில் மட்டும் மகளிர் பிரீமியர் லீக் போட்டிகள் நடந்த நிலையில், இம்முறை டெல்லி மற்றும் பெங்களூரு மைதானங்களில் போட்டியை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
பிளே ஆப் சுற்றுடன் சேர்த்து மொத்தமாக 22 போட்டிகள் நடத்தப்பட உள்ளது. மகளீர் பிரிமியர் லீக்கின் முதல் போட்டியில் கடந்த முறை சாம்பியன் பட்டத்தை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியும், இரண்டாம் இடம் பிடித்த டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் மோத உள்ளன.
இந்நிலையில் நாளை மறுநாள் மாலை 6.30 மணிக்கு பெங்களூரு மைதானத்தில் மகளிர் பிரீமியர் லீக் தொடருக்கான தொடக்க விழா பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.
அதில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாரூக் கான், ஷாகித் கபூர், சித்தார்த் மல்கோத்ரா, வருண் தவான், கார்த்திக் ஆர்யன், டைகர் ஷெராப் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். இது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தொடக்க விழாலில் இசை நிகழ்ச்சிகள், நடனங்கள் உள்ளிட்டவைக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
டெல்லி மற்றும் பெங்களூருவில் நடைபெறும் அனைத்து போட்டிகளும் இரவு 7.30 மணிக்கு தொடங்கி நடைபெறும்.