நாடாளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தலுக்கான அனைத்து பணிகளையும் மிகத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் தி.மு.க.வை பொறுத்தவரையில், தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்குழு, தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு, தேர்தல் ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டு, அவர்களும் பணிகளில் ஈடுபட தொடங்கி விட்டனர்.
இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தல் பணிகள் தொடர்பாக தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் மற்றும் தொகுதி பார்வையாளர்களுடன் தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 11.30 மணியளவில் ஆலோசனை நடத்த உள்ளார். காணொலி காட்சி வாயிலாக நடைபெற உள்ள இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள், தொகுதி பார்வையாளர்கள் மற்றும் அமைச்சர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் வெற்றி வாய்ப்பு, வேட்பாளர் தேர்வு, கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்து மாவட்ட செயலாளர்களிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாகவே கருத்து கேட்க உள்ளதாக கூறப்படுகிறது.