இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் ஐதராபாத்தில் நடந்த தொடக்க டெஸ்டில் இங்கிலாந்து 28 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சுடச்சுட பதிலடி கொடுத்த இந்தியா விசாகப்பட்டினம், ராஜ்கோட்டில் நடந்த அடுத்த இரு டெஸ்டுகளில் வெற்றிக்கனியை பறித்து தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. இதையொட்டி இரு அணியினரும் சில நாட்களாக தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.
முதல் டெஸ்டில் அதிர்ச்சிகரமாக தோல்வியை தழுவிய இந்தியா அதன் பிறகு சரிவில் இருந்து எழுச்சி பெற்று இங்கிலாந்தை பந்தாடியது. 2-வது டெஸ்டில் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவும் (9 விக்கெட்), 3-வது டெஸ்டில் ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவும் (7 விக்கெட் மற்றும் 112 ரன்) ஆட்டநாயகனாக ஜொலித்தனர். இவ்விரு போட்டியிலும் ‘இளம் புயல்’ யஷஸ்வி ஜெய்ஸ்வால் இரட்டை சதம் அடித்து (209 மற்றும் 214 ரன்) சாதனை படைத்தார். அத்துடன் கேப்டன் ரோகித் சர்மா, சுப்மன் கில் சரியான நேரத்தில் பார்முக்கு திரும்பினர். முந்தைய டெஸ்டில் அறிமுக வீரராக இடம் பிடித்த சர்ப்ராஸ்கான் இரு இன்னிங்சிலும் அரைசதம் விளாசி கவனத்தை ஈர்த்தார்.
ஆனால் மற்றொரு புதுமுகம் ரஜத் படிதாரின் பேட்டிங் தான் கவலைக்குரிய அம்சமாக உள்ளது. 4 இன்னிங்சில் வெறும் 46 ரன் மட்டுமே எடுத்துள்ளார். இதனால் அவரை மாற்றுவது குறித்து அணி நிர்வாகம் பரிசீலிக்கிறது. முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு பணிச்சுமையை கருத்தில் கொண்டு இந்த டெஸ்டில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. முதல் 3 டெஸ்டில் 17 விக்கெட்டுகளை அறுவடை செய்த அவர் இல்லாதது இந்தியாவுக்கு சற்று பாதிப்பு தான். அவருக்கு பதிலாக முகேஷ்குமார் அல்லது புதுமுகம் ஆகாஷ் தீப் ஆகியோரில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கும்.
பந்து வீச்சில் பும்ரா இல்லாத நிலையில் ஜடேஜா, அஸ்வின், குல்தீப் யாதவ் ஆகியோரின் சுழல் ஜாலத்தையே அணி நிர்வாகம் அதிகமாக சார்ந்துள்ளது.
இங்கிலாந்தை பொறுத்தவரை ஜோ ரூட் (3 டெஸ்டில் 77 ரன்), ஜானி பேர்ஸ்டோ (102 ரன்) பார்மின்றி தடுமாறுவது அந்த அணியின் பேட்டிங்கை வெகுவாக பலவீனப்படுத்தியுள்ளது. ஆனாலும் அவர்களின் திறமை மீது நம்பிக்கை வைத்து மேலும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் அணியில் இரு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. வேகப்பந்து வீச்சாளர் மார்க்வுட், சுழற்பந்து வீச்சாளர் ரெஹான் அகமது ஆகியோர் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக ஆலி ராபின்சன், சோயிப் பஷீர் ஆகியோர் இந்த டெஸ்டில் ஆட இருப்பதாக கேப்டன் பென் ஸ்டோக்ஸ் நேற்று நிருபர்களிடம் தெரிவித்தார். ஆலி ராபின்சன், வேகப்பந்து வீச்சு மட்டுமின்றி ஓரளவு பேட்டிங்கும் செய்யக்கூடியவர். இந்திய கேப்டன் ரோகித் சர்மாவை 3 முறை அவுட்டாக்கியுள்ளார். அதனால் அவரது வருகை இங்கிலாந்தின் பந்துவீச்சுக்கு வலு சேர்க்கும்.
மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் 41 வயதான ஜேம்ஸ் ஆண்டர்சன் இடத்தை தக்க வைத்துள்ளார். இன்னும் 4 விக்கெட் எடுத்தால் 700 விக்கெட் மைல்கல்லை எட்டும் முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற அரிய சாதனையை படைப்பார். அதை செய்யும் வேட்கையில் உள்ளார்.
இந்த தொடரில் இதுவரை ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த அணிகளே வாகை சூடியுள்ளன. ஆனால் இந்த போட்டியிலும் ‘டாஸ்’ முக்கிய பங்கு வகிக்கும். ‘இந்த ஆடுகளம் முழுக்க முழுக்க சுழலுக்கு உகந்த வகையில் இருக்காது. முதல் இரு நாட்களில் பேட்டிங்குக்கு ஒத்துழைக்கும். கடைசி 3 நாளில் சுழற்பந்து வீச்சு எடுபடும்’ என்று உள்ளூர் மைதான பராமரிப்பாளர் குறிப்பிட்டார்.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), ஜெய்ஸ்வால், சுப்மன் கில், ரஜத் படிதார் அல்லது தேவ்தத் படிக்கல், சர்ப்ராஸ்கான், துருவ் ஜூரெல், ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், குல்தீப் யாதவ் அல்லது அக்ஷர் பட்டேல், முகமது சிராஜ், முகேஷ்குமார் அல்லது ஆகாஷ் தீப்.
இங்கிலாந்து: ஜாக் கிராவ்லி, பென் டக்கெட், ஆலி போப், ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோ, பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), பென் போக்ஸ், டாம் ஹார்ட்லீ, ராபின்சன், ஆண்டர்சன், சோயிப் பஷீர்.
ராஞ்சி ஆடுகளம் எப்படி இருக்கும்..?
இந்திய முன்னாள் கேப்டன் டோனியின் சொந்த ஊரான ராஞ்சி மைதானத்தில் இதுவரை 2 டெஸ்ட் நடந்துள்ளது. 2017-ம் ஆண்டு நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டை ‘டிரா’ செய்த இந்தியா 2019-ம் ஆண்டு நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்டில் இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. இதில் ரோகித் சர்மா இரட்டை சதம் அடித்தது நினைவு கூரத்தக்கது.
ராஞ்சி ஆடுகளத்தன்மை குறித்து இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கூறுகையில், ‘இதற்கு முன்பு இது போன்ற ஆடுகளத்தை நான் பார்த்ததில்லை. ஒரு முனையில் பார்த்து விட்டு, இன்னொரு முனையில் பார்க்கும் போது முற்றிலும் வித்தியாசமாக தோன்றுகிறது. பார்க்க கருமையாக காணப்படுகிறது. ஒரு சில இடங்களில் பிளவுகள் உள்ளன. அனேகமாக சுழலுக்கு உதவிகரமாக இருக்கும். ஆனாலும் வேகப்பந்து வீச்சாளர் ஆலி ராபின்சனை கொண்டு வருவது நல்ல தேர்வாக இருக்கும் என்று கருதுகிறோம். அவரது உயரமும், அவர் தனக்குரிய பகுதியை குறி வைத்து இடைவிடாது வீசும் பாங்கும் அணிக்கு பலன் தரும். இந்த டெஸ்டில் நான் பந்து வீசலாம் அல்லது வீசாமலும் போகலாம்’ என்றார்.
இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் நிருபர்களிடம் கூறுகையில், ‘இந்தியாவில் ஒவ்வொரு முறை விளையாடும் போதும் ஆடுகளம் குறித்து கேள்வி எழுப்புகிறார்கள். இது வழக்கமான இந்தியாவின் ஆடுகளம் தான். இந்த ஆடுகளத்தில் எப்போதும் பிளவுகள் இருக்கும். இங்கு நிச்சயம் பந்து சுழன்று திரும்பும். ஆனால் எந்த அளவுக்கு சுழல் இருக்கும், எப்போதில் இருந்து பந்து சுழன்று திரும்ப தொடங்கும் என்பதை உறுதியாக செல்ல முடியாது. ஆனால் எங்களது அணி சரியான கலவையில் அமைந்துள்ளது’ என்றார்.