இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் இந்தியா-இங்கிலாந்து இடையிலான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்று வருகிறது.
இந்த ஆட்டத்துக்கான டாசில் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 104.5 ஓவர்களில் 353 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இங்கிலாந்து தரப்பில் ஜோ ரூட்122 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்டும், ஆகாஷ் தீப் 3 விக்கெட்டும், முகமது சிராஜ் 2 விக்கெட்டும், அஸ்வின் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
இதைத்தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா நேற்றைய 2ம் நாள் ஆட்ட நேரம் முடிவில் 73 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 219 ரன்கள் எடுத்தது. இந்தியா தரப்பில் ஜெய்ஸ்வால் 73 ரன்கள் அடித்திருந்தார். இந்நிலையில் இன்று 3-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. இதில் தொடர்ந்து பேட்டிங் ஆடிய இந்திய அணி 103.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 307 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.
இந்தியா தரப்பில் முதல் இன்னிங்சில் துருவ் ஜூரேல் 90 ரன்னும், ஜெய்ஸ்வால் 73 ரன்னும் அடித்தனர். இங்கிலாந்து தரப்பில் சோயிப் பஷீர் 5 விக்கெட்டும், டாம் ஹார்ட்லீ 3 விக்கெட்டும், வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து 46 ரன்கள் முன்னிலையுடன் தனது 2வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி இந்தியாவின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இங்கிலாந்தின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜேக் கிராவ்லி மற்றும் பென் டக்கட் ஆகியோர் களம் இறங்கினர்.
இதில் கிராவ்லி ஒரு புறம் நிலைத்து நின்று ஆட மறுமுனையில் விக்கெட்டுகள் வீழ்ந்த வண்ணம் இருந்தன. இதில் டக்கட் 15 ரன், போப் 0 ரன், ரூட் 11 ரன், பேர்ஸ்டோ 30 ரன், ஸ்டோக்ஸ் 4 ரன் எடுத்து அவுட் ஆகினர். மறுமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய கிராவ்லி அரைசதம் அடித்த நிலையில் 60 ரன்களில் அவுட் ஆனார்.
இதையடுத்து பென் போக்ஸ் மற்றும் டாம் ஹார்ட்லி ஜோடி சேர்ந்தனர். இதில் ஹார்ட்லி 7 ரன்னிலும் அடுத்து வந்த ராபின்சன் 0 ரன்னிலும் அவுட் ஆகினர். இதையடுத்து போக்ஸ் உடன் சோயப் பஷீர் ஜோடி சேர்ந்தார். இறுதியில் இங்கிலாந்து அணி தனது 2வது இன்னிங்சில் 53.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 145 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.
இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக கிராவ்லி 60 ரன்கள் எடுத்தார். இந்தியா தரப்பில் அஸ்வின் 5 விக்கெட்டும், குல்தீப் யாதவ் 4 விக்கெட்டும், ஜடேஜா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து இந்திய அணிக்கு 192 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதையடுத்து தனது 2வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோகித் சர்மா மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் களம் இறங்கினர். இறுதியில் 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா விக்கெட் இழப்பின்றி 8 ஓவர்களில் 40 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியா தரப்பில் ரோகித் 24 ரன்னுடனும், ஜெய்ஸ்வால் 16 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இந்தியாவின் வெற்றிக்கு இன்னும் 152 ரன்கள் மட்டுமே தேவைப்படுவதால் 4வது டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றுவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. நாளை 4ம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது.