இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் இந்தியா-இங்கிலாந்து இடையிலான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்றது.
இந்த ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றி அசத்தியது. இந்திய அணியின் வெற்றியில் மிக முக்கிய பந்து வகித்த இளம் விக்கெட் கீப்பர் துருவ் ஜூரெல் (90 ரன் மற்றும் 37 ரன்) ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இவரது இந்த ஆட்டத்தை அடுத்து பலரும் இவரை இந்திய முன்னாள் கேப்டன் தோனியுடன் ஒப்பிட்டு பேசினர். அடுத்த தோனி துருவ் ஜூரெல் தான் எனவும் கூறினர். இந்நிலையில் இத்தொடரில் இளம் வீரர்களை சரியாக வழி நடத்தி சிறப்பாக கேப்டன்ஷிப் செய்த ரோகித் சர்மா அடுத்த எம்எஸ் தோனியை போல் செயல்படுவதாக சுரேஷ் ரெய்னா வித்தியாசமான கருத்தை தெரிவித்துள்ளார்.
இது பற்றி அவர் கூறியதாவது, அவர் (ரோகித்) அடுத்த எம்.எஸ் .தோனி. அவர் தனது வேலையை சிறப்பாக செய்துள்ளார். குறிப்பாக எம்.எஸ். தோனியை போலவே இத்தொடரில் அவர் நிறைய இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்தார்.
சவுரவ் கங்குலி தன்னுடைய அணி வீரர்களுக்கு நிறைய ஆதரவு கொடுத்தார். பின்னர் தோனி கேப்டனாக வந்து அணியை முன்னின்று வழி நடத்தினார். அதே வழியில் சரியான பாதையில் பயணிக்கும் ரோகித் அபாரமான கேப்டன்.
எனவே இந்த வெற்றிக்கான பாராட்டை நான் ரோகித் சர்மாவுக்கு கொடுக்க விரும்புகிறேன். முதலில் சர்பராஸ் கானுக்கு வாய்ப்பு கொடுத்த அவர் பின்னர் துருவ் ஜூரெலை இந்த அணியில் ஒரு அங்கமாக உருவாக்கியுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.