ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் விசாகப்பட்டினத்தில் நடந்த முதலாவது ஆட்டத்தில் 2 விக்கெட் வித்தியாசத்திலும், திருவனந்தபுரத்தில் நடந்த 2-வது ஆட்டத்தில் 44 ரன் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்றது. கவுகாத்தியில் நடந்த 3-வது ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி கண்டது. தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சத்தீஷ்கார் தலைநகர் ராய்ப்பூரில் இன்று நடக்கிறது.
வெற்றி வாய்ப்பு யாருக்கு..?
கடந்த ஆட்டத்தில் இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட் (123 ரன்) சதம் விளாசி அணியின் ஸ்கோர் வலுவான நிலையை எட்ட வழிவகுத்தார். கேப்டன் சூர்யகுமார், திலக் வர்மா ஆகியோர் அவருக்கு பக்கபலமாக இருந்தனர். கடந்த 3 ஆட்டங்களில் ஓய்வு அளிக்கப்பட்டு இருந்த ஸ்ரேயாஸ் அய்யர் அணிக்கு திரும்புவதால் திலக் வர்மா இடத்தை இழக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பந்து வீச்சில் பிரசித் கிருஷ்ணா 4 ஓவர்களில் 68 ரன்கள் விட்டுக்கொடுத்து மோசமான சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார். வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் அழைக்கப்பட்டு இருப்பதால் பிரசித் கிருஷ்ணா வெளியே உட்கார வைக்கப்பட வாய்ப்புள்ளது. தனது திருமணத்துக்காக கடந்த ஆட்டத்தில் இருந்து விலகிய வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் குமார் திரும்புவதால், துல்லியமாக பந்து வீச முடியாமல் தடுமாறும் அவேஷ் கான் அல்லது அர்ஷ்தீப் சிங் இடத்தை தனதாக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுழற்பந்து வீச்சில் ரவி பிஷ்னோய் கட்டுக்கோப்புடன் வீசுகிறார்.
ஆஸ்திரேலிய அணியை பொறுத்தமட்டில் மேக்ஸ்வெல், ஆடம் ஜம்பா, மார்கஸ் ஸ்டோனிஸ், ஸ்டீவன் சுமித் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் உலகக் கோப்பை போட்டி தொடரில் இருந்து தொடர்ச்சியாக ஆடுவதால் நாடு திரும்பி விட்டனர். உலகக் கோப்பை போட்டிகளில் ஆடிய வீரர்களில் இறுதிப்போட்டியில் சதம் அடித்து அசத்திய டிராவிஸ் ஹெட் மட்டுமே நீடிக்கிறார்.
பேட்டிங்கில் டிம் டேவிட், மேத்யூ வேட், ஹெட் அதிரடி காட்டக்கூடியவர்கள். விக்கெட் கீப்பர் ஜோஷ் பிலிப், பென் மெக்டெர்மோட், வேகப்பந்து வீச்சாளர் பென் துவார்ஷஸ், கிறிஸ் கிரீன் ஆகியோர் புதிதாக அணியில் இணைந்துள்ளனர். பந்து வீச்சில் ஜாசன் பெரென்டோர்ப், கேன் ரிச்சர்ட்சன், தன்வீர் சங்கா ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.
ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வீரர்கள் பணிச்சுமை காரணமாக விலகி இருப்பது இந்திய அணிக்கு அனுகூலமான விஷயமாகும். தொடரை வெல்ல இந்திய அணி எல்லா வகையிலும் முயற்சிக்கும். அதேநேரத்தில் தொடரை இழக்காமல் இருக்க ஆஸ்திரேலிய அணி தீவிரமாக போராடும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்பு குறைவு இருக்காது.
ராய்ப்பூர் மைதானத்தில் 20 ஓவர் சர்வதேச போட்டி அரங்கேறுவது இதுவே முதல்முறையாகும். இங்கு இந்த ஆண்டு தொடக்கத்தில் நடந்த ஒருநாள் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை தோற்கடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல்:-
இந்தியா: யாஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் அய்யர், திலக் வர்மா அல்லது ரிங்கு சிங், அக்ஷர் பட்டேல், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங் அல்லது தீபக் சாஹர், பிரசித் கிருஷ்ணா அல்லது அவேஷ்கான், முகேஷ் குமார்.
ஆஸ்திரேலியா: ஆரோன் ஹார்டி, டிராவிஸ் ஹெட், மேத்யூ ஷார்ட், பென் மெக்டெர்மோட், டிம் டேவிட், மேத்யூ வேட் (கேப்டன்), கிறிஸ் கிரீன், பென் துவார்ஷஸ், நாதன் எலிஸ், ஜாசன் பெரென்டோர்ப், தன்வீர் சங்கா.