அரசாங்கம் பல்வேறு முக்கியமான வேலைத்திட்டங்களை தற்போது முன்னெடுத்து வருகின்றது. இந்நிலையில் இந்தியா, சீனா மற்றும் பல்வேறு மேற்கத்தைய நாடுகள் இலங்கையில் முதலீடு செய்ய முன்வந்துள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”பொருளாதார நெருக்கடியால், கடந்த காலத்தில் எவ்விதமான அபிவிருத்தி திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை. ஆனால், தற்போது பொருளாதாரம் ஓரளவு வலுவான நிலைமைக்கு திரும்புவதால் அவசியமான அபிவிருத்தி பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் கொழும்பிலும் அதனை அண்டிய பகுதிகளிலும் சீன அரசின் உதவியின் கீழ் 2000 வீடுகளை அமைப்பதற்கான வேலைத் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது” என அமைச்சர் குறிப்பிட்டார்.