89-வது ரஞ்சி கோப்பை தொடரின் இறுதிப்போட்டி நடைபெற்று வருகிறது. இதில் மும்பை – விதர்பா அணிகள் வான்கடே மைதானத்தில் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற விதர்பா பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய மும்பை அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் ஓரளவு சிறப்பாக விளையாடி அடித்தளம் அமைத்து கொடுத்தனர்.
ஆனால் அதனை சரியாக பயன்படுத்தாத பின் வரிசை வீரர்கள் விரைவில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். பின் வரிசையில் ஷர்துல் தாகூர் அதிரடியாக விளையாடி அணி நல்ல நிலையை எட்ட உதவினார். 37 பந்துகளில் அரை சதமடித்த அவர் 75 ரன்கள் அடித்த நிலையில் ஆட்டமிழந்தார். மும்பை முதல் இன்னிங்சில் 224 ரன்களில் ஆல் அவுட் ஆனது. விதர்பா தரப்பில் யாஷ் தாகூர் மற்றும் ஹர்ஷ் துபே 3 விக்கெட்டுகளும், உமேஷ் யாதவ் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய விதர்பா அணி மும்பை பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறி வருகிறது. அந்த அணி முதல் நாளில் 3 விக்கெட்டுகளை இழந்து 31 ரன்கள் அடித்துள்ளது. அதர்வா தைடே 21 ரன்களுடனும், ஆதித்யா தக்கரே ரன் எதுவுமின்றியும் களத்தில் உள்ளனர்.
மும்பை தரப்பில் தவால் குல்கர்னி 2 விக்கெட்டுகளும், ஷர்துல் தாகூர் 1 விக்கெட்டும் கைப்பற்றி உள்ளனர். நாளை 2-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.