Friday, October 18, 2024
Google search engine
Homeவிளையாட்டு2வது டெஸ்ட்; அலெக்ஸ் கேரி அபாரம் - நியூசிலாந்தை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய ஆஸ்திரேலியா

2வது டெஸ்ட்; அலெக்ஸ் கேரி அபாரம் – நியூசிலாந்தை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய ஆஸ்திரேலியா

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடியது. இதில் வெலிங்டனில் நடந்த முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா 172 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.

இந்த நிலையில் நியூசிலாந்து – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கிறைஸ்ட்சர்ச்சில் நடைபெற்றது. இந்த ஆட்டத்துக்கான டாசில் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து தனது முதல் இன்னிங்சில் 45.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 162 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. நியூசிலாந்து தரப்பில் டாம் லதாம் 38 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலியா தரப்பில் ஹேசில்வுட் 5 விக்கெட், ஸ்டார்க் 3 விக்கெட், கேமரூன் க்ரீன், கம்மின்ஸ் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா 68 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 256 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக லபுஸ்சாக்னே 90 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து தரப்பில் அபாரமாக பந்துவீசிய மேட் ஹென்றி 7 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதையடுத்து 94 ரன்கள் பின்னிலையுடன் தனது 2வது இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து 108.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 372 ரன்கள் குவித்தது. நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக ரவீந்திரா 82 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலியா தரப்பில் கம்மின்ஸ் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதையடுத்து 279 ரன்கள் எடுத்தால் வெற்றி மட்டுமின்றி டெஸ்ட் தொடரை கைப்பற்றலாம் என்ற நிலையில் ஆஸ்திரேலியா அணி களம் இறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஸ்டீவ் ஸ்மித் மற்றும் உஸ்மான் கவாஜா ஆகியோர் களம் இறங்கினர். இதில் ஸ்மித் 9 ரன்னிலும், கவாஜா 11 ரன்னிலும் அவுட் ஆகினர்.

இதையடுத்து களம் இறங்கிய மார்னஸ் லபுஸ்சாக்னே 6 ரன், கேமரூன் க்ரீன் 5 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆக ஆஸ்திரேலியா 34 ரன்னுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதையடுத்து டிராவிஸ் ஹெட் மற்றும் மிட்செல் மார்ஷ் ஜோடி சேர்ந்தனர்.

இருவரும் நிதானமாக ஆடி மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்து கொண்டனர். இறுதியில் 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா 4 விக்கெட்டுகளை இழந்து 77 ரன்கள் எடுத்திருந்தது. ஆஸ்திரேலியா தரப்பில் ஹெட் 17 ரன்னுடனும், மார்ஷ் 27 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இந்நிலையில் இன்று 4ம் நாள் ஆட்டம் நடைபெற்றது.

இதில் தொடர்ந்து பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலியா தரப்பில் ஹெட் 18 ரன்களில் அவுட் ஆனார். இதையடுத்து மார்ஷ் உடன் அலெக்ஸ் கேரி ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக ஆடி அணியை வெற்றிக்கு அழைத்து சென்றனர். இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர்.

இதில் மார்ஷ் 80 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். அடுத்து களம் இறங்கிய ஸ்டார்க் டக் அவுட் ஆனார். இதனால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து களம் இறங்கிய கேப்டன் கம்மின்ஸ் அலெக்ஸ் கேரியுடன் இணைந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இறுதியில் ஆஸ்திரேலியா அணி 65 ஓவர்களில் 7 விக்கெட்டை இழந்து 281 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா தரப்பில் அபாரமாக ஆடிய அலெக்ஸ் கேரி 98 ரன்னுடனும், கம்மின்ஸ் 32 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என முழுமையாக ஆஸ்திரேலியா கைப்பற்றியது.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments