Friday, November 22, 2024
Google search engine
Homeஇந்தியாகொடைக்கானலில் குணா குகைக்குள் தடையை மீறி நுழைந்த 3 வாலிபர்கள் கைது

கொடைக்கானலில் குணா குகைக்குள் தடையை மீறி நுழைந்த 3 வாலிபர்கள் கைது

2 வாரங்களுக்கு முன்பு மலையாளத்தில் ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ என்ற திரைப்படம் வெளியானது. கொடைக்கானல் குணா குகையை மையப்படுத்தி இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. கேரளாவை விட தமிழகத்தில் இந்த திரைப்படம் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.

இதனால் ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ திரைப்படத்தை பார்த்த பலரும், கொடைக்கானல் குணா குகையை எப்படியாவது பார்த்துவிட வேண்டும் என்று வருகை தருகின்றனர். இதன்காரணமாக குணா குகையை பார்வையிட வருவோர் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

இந்தநிலையில் நேற்றும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குணா குகையை பார்வையிட படையெடுத்து வந்தனர். அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டம் ஜல்லிக்கல் கிராமத்தை சேர்ந்த பாரத் (வயது 24) மற்றும் அவருடைய நண்பர்களான பையூரை சேர்ந்த விஜய் (24), ராணிப்பேட்டை மாவட்டம் மலமேடு பகுதியை சேர்ந்த ரஞ்சித்குமார் (24) ஆகியோர் கொடைக்கானல் குணாகுகை பகுதிக்கு வந்தனர்.

அப்போது 3 பேரும் குணா குகையை சுற்றி அமைக்கப்பட்டிருந்த இரும்பு தடுப்புவேலிகளை தாண்டி தடையை மீறி உள்ளே சென்றனர். குணா குகைக்கு செல்லும் பாதையில் நின்றபடி அவர்கள் புகைப்படம் எடுத்தனர். அதைத்தொடர்ந்து குணா குகையின் உட்புற பகுதிக்கும் அவர்கள் செல்ல முயன்றனர்.

அப்போது குணா குகை பகுதியில் திடீர் ரோந்து சென்ற வனத்துறையினர், 3 வாலிபர்கள் நிற்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவர்களை எச்சரித்து மேலே வரவழைத்தனர். அதன்பிறகு 3 பேரையும் வனத்துறை அலுவலகத்திற்கு அழைத்து சென்று, வனச்சரகர்கள் சிவக்குமார், செந்தில் ஆகியோர் விசாரணை நடத்தினர். அதில், 3 வாலிபர்களும் ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ திரைப்படத்தை பார்த்து, குணா குகையை பார்த்துவிட வேண்டும் என்ற ஆர்வத்தில் உள்ளே நுழைய முயன்றதாக தெரிவித்தனர்.

இதையடுத்து வன உயிரின பாதுகாப்பு சட்டம் மற்றும் வன பாதுகாப்பு சட்டத்தின்கீழ் வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து, பிடிபட்ட பாரத், விஜய், ரஞ்சித்குமார் ஆகியோரை கைது செய்தனர். மேலும் குணா குகை பகுதி மிகவும் ஆபத்தானது. எனவே தடையை மீறி யாரும் குகை பகுதிக்கு செல்லக்கூடாது. மீறி செல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட வன அலுவலர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments