உள்நாட்டு சரக்கு போக்குவரத்தில் குறைந்த செலவிலும், விரைவாகவும் செல்லும் வகையில் ரெயில் போக்குவரத்து விளங்குகிறது. இந்த சரக்கு போக்குவரத்தை மேம்படுத்த தெற்கு ரெயில்வே பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்த நிலையில் தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பில், சரக்கு போக்குவரத்து மூலம் நடப்பு நிதியாண்டில் மட்டும் அதாவது கடந்த 8 மாதங்களில் 26.082 மில்லியன் டன் சரக்குகள் கையாளப்பட்டுள்ளது. இதன் மூலம், தெற்கு ரெயில்வே ரூ.2 ஆயிரத்து 319 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.
இதேபோல, நவம்பர் மாதத்தில் மட்டும் அதிகபட்சமாக ரூ.291 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இதில் அதிகப்பட்சமாக நிலக்கரி, சிமெண்ட், உணவு தானியங்கள், உரங்கள் போன்ற சரக்குகள் கையாளப்பட்டுள்ளது.
இந்திய ரெயில்வே முழுவதும் நடப்பு நிதியாண்டில் ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்து 7 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இது கடந்த நிதியாண்டில் கிடைத்த வருவாயை விட ரூ.4 ஆயிரத்து 102 கோடி கூடுதல் ஆகும், இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.