இஸ்ரேல் மீது கடந்த அக்டோபர் 7ம் தேதி காசா முனையில் செயல்படும் ஹமாஸ், இஸ்லாமிக் ஜிகாத் போன்ற ஆயுதக்குழுக்கள் பயங்கரவாத தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் இஸ்ரேலில் 1,200 பேர் கொல்லப்பட்டனர்.
மேலும், இஸ்ரேலில் இருந்து 247 பேரை பணய கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. இந்த தாக்குதலை தொடர்ந்து காசாவில் உள்ள ஹமாஸ் ஆயுதக்குழுவினர் மீது இஸ்ரேல் போர் அறிவித்தது.
போரில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் காசாவில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போரின்போது மேற்குகரை பகுதியிலும் வன்முறை வெடித்தது. இந்த மோதலில் மேற்குகரையில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இதனை தொடர்ந்து இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா, எகிப்து, கத்தார் உள்ளிட்ட நாடுகள் முயற்சித்தன. இந்த முயற்சியின் பலனாக கடந்த 24ம் தேதி முதல் இஸ்ரேல்-ஹமாஸ் இடையே தற்காலிக போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது.
மேலும், நிபந்தனை அடிப்படையில் தங்கள் வசம் உள்ள பணய கைதிகளில் சிலரை ஹமாஸ் விடுவித்தது. இதற்கு மாறாக தங்கள் நாட்டின் சிறையில் உள்ள பாலஸ்தீனியர்களில் சிலரை இஸ்ரேல் விடுவித்தது.
அதன்படி, கடந்த 7 நாட்களாக அமலில் இருந்த தற்காலிக போர் நிறுத்தத்தின் பயனாக ஹமாஸ் வசமிருந்த பணயக்கைதிகளில் 105 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இதில், 81 பேர் இஸ்ரேலியர்கள், 23 பேர் தாய்லாந்து நாட்டினர், ஒருவர் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்தவர் ஆவார். அதேவேளை, காசாமுனையில் ஹமாஸ் வசம் இன்னும் 136 பேர் பணய கைதிகளாக உள்ளனர்.
இதனிடையே, தற்காலிக போர் நிறுத்தம் நேற்று காலையுடன் நிறைவடைந்த நிலையில் போர் மீண்டும் தொடங்கியுள்ளது. இஸ்ரேல் மீது ஹமாஸ் ஆயுதக்குழுவினர் ராக்கெட் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அதேவேளை, காசாமுனை மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும், காசாவில் உள்ள இஸ்ரேல் படையினர் தரைவழி தாக்குதலையும் தீவிரப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இஸ்ரேல் மீது அக்டோபர் 7ம் தேதி பயங்கரவாத தாக்குதல் நடத்திய ஹமாஸ் ஆயுதக்குழுவினரின் தலைவர்களை காசாமுனை மட்டுமின்றி உலகில் எங்கு இருந்தாலும் தேடிப்பிடித்து கொல்லுமாறு தங்கள் நாட்டின் உளவு அமைப்பான மொசாட்டிற்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உத்தரவிட்டுள்ளார்.
இந்த உத்தரவையடுத்து, ஹமாஸ் தலைவர்களை கண்டுபிடிப்பதற்கான திட்டங்களை இஸ்ரேல் உளவுத்துறை மொசாட் தீட்டி வருகிறது.
துருக்கி, கத்தார், லெபனான், ஈரான் போன்ற நாடுகளில் உள்ள ஹமாஸ் ஆயுதக்குழு தலைவர்களை கொல்ல இஸ்ரேல் திட்டமிட்டு வருகிறது.