ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இந்திய அணி முதலாவது ஆட்டத்தில் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் 44 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றது. 3-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. ராய்ப்பூரில் நேற்று முன்தினம் நடந்த 4-வது ஆட்டத்தில் இந்திய அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
இந்த நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.
ஏற்கனவே தொடரை கைப்பற்றி விட்டதால் இந்திய அணியில் சில மாற்றங்கள் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர், பேட்ஸ்மேன் திலக் வர்மாவுக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலிய அணியில் முந்தைய ஆட்டத்தில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டதால் தன்வீர் சங்கா தவிர வேறு மாற்றம் செய்ய வழியில்லை. அந்த அணியின் பேட்டிங்கில் டிராவிஸ் ஹெட், மேத்யூ வேட்டும், பவுலிங்கில் பெரென்டோர்ப், பென் துவார்ஷஸ்சும் நல்ல நிலையில் உள்ளனர்.
சின்னசாமி ஸ்டேடியம் பேட்டிங்குக்கு அனுகூலமானதாகும். அத்துடன் பவுண்டரி தூரமும் குறைவாகும். எனவே இந்த ஆட்டத்தில் ரன் மழைக்கு பஞ்சம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. வானம் மேகமூட்டமாக இருக்கும். ஆனால் மழை பெய்ய வாய்ப்பில்லை என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல்:-
இந்தியா: யாஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட், ஸ்ரேயாஸ் அய்யர் அல்லது திலக் வர்கா, சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ஜிதேஷ் ஷர்மா, ரிங்கு சிங், அக்ஷர் பட்டேல் அல்லது வாஷிங்டன் சுந்தர், தீபக் சாஹர், ரவி பிஷ்னோய், அவேஷ் கான், முகேஷ் குமார்.
ஆஸ்திரேலியா: ஜோஷ் பிலிப், டிராவிஸ் ஹெட், பென் மெக்டெர்மோட், ஆரோன் ஹார்டி, டிம் டேவிட், மேத்யூ ஷார்ட், மேத்யூ வேட் (கேப்டன்), பென் துவார்ஷஸ், கிறிஸ் கிரீன், ஜாசன் பெரென்டோர்ப், தன்வீர் சங்கா அல்லது நாதன் எலிஸ் அல்லது கேன் ரிச்சர்ட்சன்.