Monday, December 23, 2024
Google search engine
Homeஉலகம்இடிந்து விழும் அபாயத்தில் இத்தாலி 'சாய்ந்த கோபுரம்'- பாதுகாப்பு நடவடிக்கை தீவிரம்

இடிந்து விழும் அபாயத்தில் இத்தாலி ‘சாய்ந்த கோபுரம்’- பாதுகாப்பு நடவடிக்கை தீவிரம்

இத்தாலியின் போலோக்னா நகரின் முக்கிய அடையாளமாக திகழும் கரிசெண்டா சாய்ந்த கோபுரம் 900 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்தது. வானளாவ நிமிர்ந்து நின்ற இந்த கோபுரம், கடந்த சில ஆண்டுகளாக, படிப்படியாக சாயத் தொடங்கியது.

இதையடுத்து அறிவியல் ஆய்வுக்குழுவினர் இந்த கோபுரத்தை ஆய்வு செய்தனர். 2019 ஆம் ஆண்டு முதல் தளத்தை கண்காணித்த அறிவியல் குழுவினர், சமீபத்தில் 27 பக்க அறிக்கையை வெளியிட்டனர், அதில், கோபுரத்தின் தன்மை மோசமாக இருப்பதாகவும், இடிந்து விழுவதற்கான வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவித்திருந்தனர். கடந்த அக்டோபர் மாதம் வெளியான சென்சார் அளவீடுகள், இந்த எச்சரிக்கையை மேலும் தீவிரப்படுத்தின.

கோபுரம் மேலும் சாய்ந்ததாலும், செங்கற்களில் ஏற்பட்ட விரிசல் விரிவடைவதாலும் கோபுரத்தின் நாட்கள் எண்ணப்படுகின்றன.

கோபுரம் தற்போது 4 டிகிரி கோணத்தில் சாய்ந்துள்ளதாக சிபிஎஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டிருக்கிறது. இத்தாலியின் மிகவும் பிரபலமான பைசா நகரத்து சாய்ந்த கோபுரம் 5 டிகிரி கோணத்தில் சாய்ந்திருக்கிறது. இதை ஒப்பிட்டால் கரிசெண்டா கோபுரத்தின் சாய்வு கோணம் குறைவுதான். ஆனால், கட்டிடத்தின் உறுதித்தன்மை மோசமடைந்துள்ளது. இதனால் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

கோபுரம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளதாக நிபுணர்களின் புதிய அறிக்கை தெரிவிக்கிறது. அதனால், ஒவ்வொரு நிகழ்வையும் எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும் என்று நகர செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

கோபுரத்தை சுற்றி வசிக்கும் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக கோபுரத்தை சுற்றிலும் வலுவான வேலி அமைக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

கோபுரத்தின் இடிபாடுகளை வெளியில் விழாமல் தடுத்து, சுற்றியுள்ள கட்டிடங்களுக்கு பாதுகாப்பை ஏற்படுத்தும் வகையில் பாதுகாப்பு வலைகளுடன் கூடிய உலோக வளைவை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளனர். உலோக வளைவு தரையில் உறுதியாக பொருத்தப்படும். உலோகத்தால் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ராக்ஃபால் பாதுகாப்பு வலைகளும் தரையில் வலுவாக நங்கூரமிடப்படும்.

எனினும், கோபுரம் எப்போது இடிந்து விழும் என்பது சரியாக கணிக்கப்படவில்லை. இதனால் மக்கள் வெளியேறுவதற்கான எச்சரிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை.

“கோபுரம் சரிந்து விழுந்தால் என்ன ஆகுமோ என்ற நிலையில், நாங்கள் செயல்படுகிறோம். ஆனால் அது எப்போது விழும் என்று யாருக்கும் தெரியாது. மூன்று மாதங்கள் ஆகலாம், 10 ஆண்டுகள் அல்லது 20 ஆண்டுகள்கூட ஆகலாம். விரைவில் கோபுரம் இடிந்து விழும் அபாயம் இருந்திருந்தால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் வெளியேற்றப்பட்டிருப்பார்கள்” என நகர செய்தித் தொடர்பாளர் கூறினார்.

இத்தாலியின் போலோக்னா நகரின் அடையாளங்களாக இரண்டு சாய்ந்த கோபுரங்கள் உள்ளன. அவை பழைய வளையச் சுவரின் (old ring wall) வாயில்களுக்குச் செல்லும் சாலைகளின் சந்திப்பில் அமைந்துள்ளன. உயரமான கோபுரம் அசினெல்லி என்றும், அதிக அளவில் சாய்ந்த சிறிய கோபுரம் கரிசெண்டா என்றும் அழைக்கப்படுகிறது. அசினெல்லி கோபுரம் 319 அடி உயரம் கொண்டது. கரிசெண்டா கோபுரத்தின் உயரம் 157 அடி ஆகும்.

1109-1119 காலகட்டத்தில் கோபுரங்களைக் கட்டியதாகக் கருதப்படும் குடும்பங்களின் பெயர்கள் இந்த கோபுரங்களுக்கு சூட்டப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments