ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் ஏற்கனவே நடைபெற்று முடிந்த நான்கு போட்டிகளின் முடிவில் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி இருந்தது.
இந்த நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்றது. அதன்படி இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ஆஸ்திரேலிய வீரர்களின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இந்திய அணி வீரர்களில் ஜெய்ஸ்வால் 21 ரன்களிலும், கெய்க்வாட் 10 ரன்களிலும், சூர்யகுமார் யாதவ் 5 ரன்களிலும் விரைவில் ஆட்டமிழந்தனர். அதன்பின் களமிறங்கிய ரிங்கு சிங் 6 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். சிறிது நேரம் அதிரடி காட்டிய ஜித்தேஷ் சர்மாவும் 24 ரன்களில் அவுட் ஆனார். ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும் மறுமுனையில் ஸ்ரேயாஸ் ஐயர் நிலைத்து நின்று விளையாடினார். அவருக்கு ஆல் ரவுண்டர் அக்சர் படேல் நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார். அதிரடியாக விளையாடிய அக்சர் படேல் 31 ரன்களில் ஆட்டமிழந்தார். அரைசதம் அடித்த ஸ்ரேயாஸ் ஐயர் 53 ரன்களில் கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார்.
பின்னர் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக பென் துவர்ஷுயிஸ் மற்றும் ஜேசன் பெஹ்ரன்டோர்ப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா அணியின் சார்பில் டிராவிஸ் ஹெட் மற்றும் ஜோஸ் பிலிப் ஆகியோர் களமிறங்கினர். இந்த ஜோடியில் ஜோஸ் பிலிப் 4 ரன்களில் வெளியேற, அவரைத்தொடர்ந்து டிராவிஸ் ஹெட் 28 ரன்களும், ஹார்டி 6 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
அடுத்ததாக களமிறங்கிய டிம் டேவிட் 17 ரன்களில் கேட்ச் ஆனார். மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பென் மெக்டெர்மோட் தனது அரை சதத்தை பதிவு செய்திருந்தநிலையில் 54 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய மேத்யூ ஷாட் 16 ரன்களும், பென் டிவார்ஷிஸ் (0) ரன் ஏதும் எடுக்காமலும், சிறிது நேரம் அதிரடி காட்டிய கேப்டன் மேத்யூ வேட் 22 ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார்.
முடிவில் பெஹ்ரன்டோர்ப் 2 ரன்களும், எல்லீஸ் 4 ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் ஆஸ்திரேலியா அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணியின் சார்பில் அதிகபட்சமாக முகேஷ் குமார் 3 விக்கெட்டுகளும், ரவி பிஷ்னோய் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், அக்சர் படேல் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதன்மூலம் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான கடைசி 20 ஓவர் போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது. இதன்படி 5 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டியில் 4-1 என்ற புள்ளிக்கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றி அசத்தியது.