இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் நிறுத்த காலம் நிறைவடைந்த நிலையில் காசா முனையில் இஸ்ரேல் மீண்டும் தாக்குதலை தொடங்கியுள்ளது. போர் விமானங்கள் மூலம் காசா முனையில் உள்ள ஹமாஸ் ஆயுதக்குழுவினரின் நிலைகளை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.
மேலும், காசாவில் தரைவழி தாக்குதலையும் தொடங்கியுள்ளது. அதேபோல், இஸ்ரேல் மீது ஹமாஸ் ஆயுதக்குழுவினர் ராக்கெட் தாக்குதலை நடத்துகின்றனர். காசாவில் இஸ்ரேல் படையினர் – ஹமாஸ் ஆயுதக்குழுவினர் இடையே துப்பாக்கிச்சண்டையும் நடைபெற்று வருகிறது.
பாலஸ்தீனத்தின் காசா மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்தி வரும் வேளையில் அங்கு அப்பாவி மக்கள் கொல்லப்படுவதை தவிர்க்க முடிந்த அனைத்தையும் செய்யுமாறு இஸ்ரேலை அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
ஆனால் இஸ்ரேல் அதனை பொருட்படுத்தாமல் தெற்கு காசா மீதான தாக்குதலை தொடர்ந்து தீவிரப்படுத்தி வருகிறது. நேற்றும் கான் யூனிஸ் நகரில் இஸ்ரேல் போர் விமானங்கள் முழு வீச்சில் தாக்குதலில் ஈடுபட்டன. போர் நிறுத்தம் முடிவுக்கு வந்ததையடுத்து இஸ்ரேல் தாக்குதலில் இதுவரை 240 பேர் பலியாகி உள்ளதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும் நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது. போர் தொடங்கியதில் இருந்து இதுவரை காசாவில் பலியானவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்தை கடந்துள்ளதாகவும், இதில் 70 சதவீதத்துக்கும் அதிகமானோர் பெண்கள் மற்றும் சிறுவர்கள் என்றும் காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையின்படி, காசாவில் சுமார் 1.7 மில்லியன் மக்கள் (சுமார் 80 சதவீத மக்கள்) எட்டு வாரப் போரினால் இடம்பெயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே இஸ்ரேலுக்கும் ஹமாசுக்கும் இடையிலான போர்நிறுத்தம் வெள்ளிக்கிழமை முடிவடைந்த பின்னர், எகிப்தில் இருந்து ரபா எல்லை வழியாக உதவித் தொடரணிகளை கொண்டு வர வேண்டாம் என்று இஸ்ரேல் தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடம் கூறியதாக பாலஸ்தீன செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.