Saturday, July 27, 2024
Google search engine
Homeஉலகம்போர் தொடங்கியதில் இருந்து உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு

போர் தொடங்கியதில் இருந்து உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு

ரஷியாவின் தொடர் எச்சரிக்கைகளை மீறி நேட்டோ அமைப்பில் இணைவதற்கான முயற்சிகளை உக்ரைன் தொடர்ந்து முன்னெடுத்தது. இதன்காரணமாக கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைன் நாட்டின் மீது ரஷியா தனது படைகளை அனுப்பி தாக்குதல் நடத்த தொடங்கியது.

மிகப்பெரிய படைபலத்தை கொண்ட ரஷியா, ஓரிரு நாட்களில் உக்ரைனை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேட்டோ உறுப்பு நாடுகளான அமெரிக்கா மற்றும் பிற மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு தேவையான ராணுவ மற்றும் நிதியுதவிகளை வாரி வழங்கி வருகின்றன. இதன் காரணமாக போர் தொடங்கி 2 ஆண்டுகளை கடந்த பிறகும் உக்ரைன் ராணுவம் ரஷியாவுக்கு தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது.

அதே சமயம் இந்த போரில் உக்ரைன் பெரும் இழப்பையும் சந்தித்து வருகிறது. உக்ரைனின் பல்வேறு நகரங்கள் தற்போது ரஷியாவின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டன. அவற்றை மீட்டெடுப்பதற்கான முயற்சியில் உக்ரைன் ராணுவம் தீவிரம் காட்டி வருகிறது. ஆனால் உக்ரைனின் முயற்சிகளை முறியடிக்க ரஷியா தொடர்ந்து தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகிறது.

3-வது ஆண்டாக தொடரும் இந்த போரில் இருதரப்பிலும் ஏராளமான வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இதனால் இருநாடுகளுமே கட்டாய ராணுவ சேவை திட்டத்தின் கீழ் ராணுவத்துக்கு ஆட்களை சேர்த்து வருகின்றன. இந்த நிலையில் போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் சுமார் 5 லட்சம் ராணுவ வீரர்கள் பலியாகி உள்ளதாக ரஷிய ராணுவம் தெரிவித்துள்ளது.

இது குறித்து மாஸ்கோவில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது ரஷிய ராணுவ மந்திரி செர்ஜி ஷோய்கு கூறுகையில், “மொத்தத்தில், சிறப்பு ராணுவ நடவடிக்கையின் தொடக்கத்திலிருந்து தற்போது வரையில் உக்ரைன் ஆயுதப்படைகள் கிட்டத்தட்ட அரை மில்லியன் (5 லட்சம்) ராணுவ வீரர்களை இழந்துள்ளன. உக்ரைன் ராணுவத்தின் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டிரோன்கள், 1,000 ஏவுகணைகள், சுமார் 900 விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களை ரஷியா அழித்துள்ளது” என்று தெரிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments