இலங்கையில் உள்ள விவாகரத்துச் சட்டங்களின் வரம்பு தொடர்பான ஒரு முக்கிய தீர்ப்பில், மற்றொரு நாட்டில் தகுதிவாய்ந்த நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட விவாகரத்தை, நிரூபிக்கும் மற்றும் செல்லுபடியாகும் ஆவணத்தை இலங்கையில் சமர்ப்பித்தால், இலங்கையில் உள்ள ஒரு மாவட்ட நீதிமன்றத்தால் அது ஏற்றுக்கொள்ளப்பட தடையில்லை என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் கூறியுள்ளது.
எவ்வாறாயினும், இந்த ஏற்பு நீதிமன்றத்தால் குறிப்பிடப்பட்ட வழிகாட்டுதல்கள் மற்றும் சான்றுகள் தொடர்பான சட்ட விதிகளுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும் என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அத்தகைய ஒரு நாட்டின் சட்டம், வெளிநாட்டில் நிகழும் திருமணங்களை ரத்து செய்வதற்கான அதிகார வரம்பை அந்தந்த நீதிமன்றத்திற்கு வழங்கியுள்ளதா என்பதைக் கண்டறிய முதல் வழிகாட்டுதல் உள்ளது.
இரண்டாவதாக, இலங்கையில் திருமண ஒப்பந்தம் செய்து கொண்ட இரு தரப்பினரும் விவாகரத்துக்கு விண்ணப்பிக்கும் போது அந்தந்த நாட்டில் நியாயமான காலம் தங்கியிருப்பது அவசியம்.
மூன்றாவதாக, கணவன்-மனைவி இருவரும் அத்தகைய விவாகரத்து நடவடிக்கைகளில் வெளிநாட்டு நீதிமன்றத்தில் முழுமையாக பங்கேற்க வேண்டும் என மன்று தெரிவித்துள்ளது.