திருமணம் என்பது இரு மனங்கள் இணையும் விழா…. வாழ்நாள் முழுவதும் சேர்ந்து வாழக்கூடிய நபரை கரம் பிடிக்க கூடிய நிகழ்வாக திருமணம் உள்ளது. இதனால், ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் திருமணம் என்பது மறக்க முடியாத ஒரு நிகழ்ச்சியாக உள்ளது. தங்களுக்கு வரக்கூடிய பார்ட்னர் எப்படி இருக்க வேண்டும்.. என்ன படித்து இருக்க வேண்டும் என்ற கனவுடன் மணமக்கள் இருப்பார்கள். தங்கள் பிள்ளைகளுக்கு ஏற்ற மணமகன் அல்லது மணமகளை தேர்வு செய்து கொடுக்க பெற்றோரும் அதிக மெனக்கெடுவார்கள். எனினும், சில நேரத்தில் பொய்யை சொல்லி எப்படியாவது திருமணத்தை நடத்த முயற்சிக்கிறார்கள். அப்படியான ஒரு சம்பவம்தான் உத்தர பிரதேசத்தில் அரங்கேறி உள்ளது.
உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள சுல்தான்பூர் மாவட்டத்தில் கடந்த 17-ம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. அதன்படி பட்டப்படிப்பு முடித்த 28 வயது பெண்ணுக்கும் 30 வயது வாலிபருக்கும் பெற்றோர்கள் திருமணத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர். இந்தநிலையில் மாப்பிள்ளை 10-ம் வகுப்பு தோல்வி அடைந்தாக கூறப்படுகிறது. இது குறித்து மணப்பெண்ணிற்கு தெரிய வரவே தான் பட்டப்படிப்பு முடித்துள்ளதால் 10-ம் வகுப்பு பெயில் அடைந்த இந்த மாப்பிள்ளையை திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று மணப்பெண் மறுத்துள்ளார்.
இரு குடும்பத்தாரும் மணமகளிடம் பல மணி நேரமாக பேச்சுவார்த்தை நடத்தியும் பலனளிக்கவில்லை. இதைத்தொடர்ந்து திருமணம் நின்றது. மேலும் திருமணம் பாதியில் நின்றதால் வரதட்சனையாக கொடுக்கப்பட்ட நகை, பணம் ஆகியவற்றை மணப்பெண் குடுமபத்தினரிடம் மணமகன் குடும்பத்தினர் திரும்ப ஒப்படைத்தனர். மணமகளின் தந்தைக்கு மூன்று மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். இவர் டெல்லியில் கூலி வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது.