மொத்தம் 70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டசபையின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் முடிவடைகிறது. இதையொட்டி தேர்தல் அறிவிப்பு ஜனவரியில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி 11 வேட்பாளர்களை கொண்ட முதற்கட்ட பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி ஆம் ஆத்மியில் இணைந்த 6 பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
பாஜகவில் இருந்து விலகி ஆம் ஆத்மியில் இணைந்த பிரம் சிங் தன்வார் (சதர்பூர்), அனில் ஜா (கிராரி), பிபி தியாகி (லட்சுமி நகர்) ஆகியோர் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. அதேபோல காங்கிரசில் இருந்து விலகி ஆம் ஆத்மியில் இணைந்த ஜுபைர் சவுத்ரி (சீலம்பூர்), வீரசிங் திங்கன் (சீமாபுரி) , சோமேஷ் ஷோகீன் (மட்டியாலா) ஆகியோர் பெயர்கள் அதில் இடம்பெற்றுள்ளன.
கட்சியின் ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் அரசியல் விவகாரக்குழு (பிஏசி) கூட்டத்திற்குப் பிறகு பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. கடந்த 2020ம் ஆண்டு நடைபெற்ற டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருந்தது. அதாவது மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 62 தொகுதிகளை ஆம் ஆத்மி கைப்பற்றியது. பாஜக 8 தொகுதிகளில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.