Friday, November 22, 2024
Google search engine
Homeஇந்தியாதொழில் அதிபர் அதானி மீதான முறைகேடு குற்றச்சாட்டு: பின்னணி என்ன?

தொழில் அதிபர் அதானி மீதான முறைகேடு குற்றச்சாட்டு: பின்னணி என்ன?

இந்தியாவின் பெரும் தொழில் அதிபர்களில் ஒருவர் கவுதம் அதானி. இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளிலும் அதானி குழுமங்கள் தொழில் செய்து வருகிறது. இந்தியாவில் துறைமுகம், மின்சாரம், சுரங்கம் உள்ளிட்ட துறைகளிலும் அதானி குழும நிறுவனங்கள் கோலோச்சி வருகிறது. உலக பணக்காரர்கள் பட்டியலில் 22-வது இடத்தில் இருக்கும் அதானிக்கு எதிராக அமெரிக்க கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதானிக்கு எதிரான வழக்கு என்ன? என்பது பற்றிய விவரங்கள் வருமாறு:

அதானி குழும நிறுவனம், சூரிய ஒளி மின்சாரம் விநியோக ஒப்பந்தங்களை பெறுவதற்காக 26 கோடி டாலர்கள்(இந்திய மதிப்பில் சுமார் ரூ. 2,100 கோடி) லஞ்சமாக இந்திய அதிகாரிகளுக்கு கொடுத்ததாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. அதாவது, இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததை மறைத்து, அமெரிக்காவில் இருந்து முதலீடுகளை பெற்று முறைகேட்டில் ஈடுபட்டதாக நியூயார்க் கோர்ட்டில் அமெரிக்க பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் தரப்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

நியூயார்க்கில் உள்ள பெடரல் கோர்ட்டில், தாக்கல் செய்யப்பட்ட புகாரில், 2020 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில் இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் ஜூலை 2021 மற்றும் பிப்ரவரி 2022 இடையேயான காலகட்டத்தில், ஒடிசா, தமிழ்நாடு, ஜம்மு – காஷ்மீர், சத்தீஷ்கர் மற்றும் ஆந்திரப் பிரதேச மாநிலங்களில் மின் விநியோக ஒப்பந்தங்களை அதானி குழுமம் பெற்றதாக கூறப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தங்களை பெறுவதற்காக இந்திய அரசின் உயர் அதிகாரிகளை பலமுறை, அதானியே நேரில் சந்தித்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் கோர்ட்டில் கூறப்பட்டுள்ளது. நியூ யார்க் மாகாணத்தின் துணை அட்டர்னி ஜெனரல் லிசா மில்லர் என்பவர் தாக்கல் செய்த புகாரில் இந்த குற்றச்சாட்டுகளை முன்வைத்து இருக்கிறார். இந்த வழக்கில், கவுதம் அதானி மட்டுமின்றி அவரது உறவினர் சாகர் அதானி, வினீத் ஜெயின், ரஞ்சித் குப்தா, சவுரவ் அகர்வால் உள்பட 7 பேரின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, முறைகேடு புகாரை அடுத்து அமெரிக்காவில் திரட்டிய நிதியை பயன்படுத்த மாட்டோம் என அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. முறைகேடு புகார் எழுந்த நிலையில், அதானி குழும நிறுவன பங்குகள் சுமார் 20 சதவீதம் சரிவை எதிர்கொண்டது. ஆசிய அளவிலும் அந்த நிறுவன பங்குகள் சரிவை கண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பங்குகளின் மதிப்பு சுமார் 2 லட்சம் கோடியாக இருக்கும் என பங்குச்சந்தை வட்டாரங்கள் கூறுகின்றன. இதனிடையே, இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக அதானிக்கு எதிராக அமெரிக்க கோர்ட்டு பிடிவாரண்ட் பிறப்பித்ததுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments