Saturday, October 19, 2024
Google search engine
Homeஇந்தியாமும்பையை தாக்கிய புழுதிப்புயல்; ராட்சத விளம்பர பலகை விழுந்து விபத்து

மும்பையை தாக்கிய புழுதிப்புயல்; ராட்சத விளம்பர பலகை விழுந்து விபத்து

மராட்டிய மாநில தலைநகரான மும்பை நகரை நேற்று திடீரென புழுதிப்புயல் புரட்டி எடுத்தது. சுமார் 40 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் நேற்று காலை எச்சரிக்கை விடுத்து இருந்தது. அதன்படி மாலை 4 மணி அளவில் திடீரென வானத்தில் கருமேகங்கள் திரண்டன. பலத்த காற்று வீசத் தொடங்கியது. 50 முதல் 75 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது. இதனால் புழுதி பறந்தது.

அத்துடன் இடியுடன் கூடிய பலத்த மழையும் பெய்தது. காற்று, புழுதி, மழையும் சேர்ந்து தாக்கியதால் மும்பை நகர் மற்றும் புறநகர் பகுதிகள் தூசி படலமாக காட்சியளித்தது. மும்பையை அடுத்த தானே, பால்கர் உள்ளிட்ட பகுதிகளிலும் இதன் பாதிப்பு இருந்தது.

தெளிவற்ற வானிலையால் வாகன ஓட்டிகள் திக்குமுக்காடி போனார்கள். அவர்கள் ஆங்காங்கே பாதுகாப்பான இடங்களை நோக்கி சென்று ஒதுங்கினர். சில இடங்களில் வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டன. லால்பாக் பாலத்தில் சென்ற கார் ஒன்று தலைக்குப்புற கவிழ்ந்தது. மேக்வாடி நாக்கா பகுதியில் தென்னை மரம் ஒன்று ஆட்டோ மீது விழுந்தது. இதில் ஆட்டோ டிரைவர் பலத்த காயம் அடைந்தார்.

வடலா – அன்டாப்ஹில் சாலையில் உள்ள பர்கத் அலி நாக்கா பகுதியில் உலோகத்தால் அமைக்கப்பட்ட பல அடுக்கு வாகன நிறுத்த கோபுரம் (பார்க்கிங் டவர்) இடிந்து விழுந்தது. அதில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த சுமார் 50 கார்கள் சேதமடைந்ததாக தெரிகிறது. மேலும் 3 பேர் காயம் அடைந்தனர். இருப்பினும் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் இல்லை. இடிபாடுகளை அகற்றும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டனர். இந்த வாகன நிறுத்த கோபுரம் உடைந்து விழும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

பெரும் துயர சம்பவமாக மும்பை காட்கோபர், கிழக்கு எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் உள்ள போலீஸ் கிரவுண்ட் பெட்ரோல் பங்கில் அமைக்கப்பட்டு இருந்த ராட்சத விளம்பர பலகை பலத்த காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் சரிந்து விழுந்தது. சுமார் 100 அடி உயரம் கொண்ட இந்த பதாகை இரும்பு சாரங்களுடன் விழுந்ததால் பெட்ரோல் பங்க் மற்றும் அருகில் இருந்து வீடுகள் நொறுங்கின. இந்த ராட்சத பலகைக்குள் பலர் சிக்கி கொண்டனர்.

தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள், தேசிய மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிய பலரை மீட்டனர். இதில் 70 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் ராஜாவாடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தொடர் மீட்பு நடவடிக்கையில் 8 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டிருந்தநிலையில் தற்போது பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் பலர் உள்ளே சிக்கி இருக்கலாம் என்று கூறப்பட்டது. இதனால் இரவில் மீட்பு பணி தொடர்ந்து நடந்தது.

முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே சம்பவ இடத்துக்கு நேரில் சென்று மீட்பு பணிகளை பார்வையிட்டார். உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்தார்.

புழுதிப்புயலால் சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் விமான சேவை சுமார் 66 நிமிடங்கள் ஸ்தம்பித்தது. மழை மற்றும் காற்றின் காரணமாக ஓடுபாதை தெரியாத காரணத்தால் சுமார் 15 விமானங்கள் திரும்பி விடப்பட்டன. விமான பயணிகள் சிரமத்திற்கு ஆளாகினர். பின்னர் மாலை 5.03 மணி அளவில் விமான சேவை மீண்டும் தொடங்கியது. இதேபோல் மெட்ரோ ரெயில் சேவை மற்றும் மின்சார ரெயில் சேவையும் பாதிக்கப்பட்டது.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments