ஈரான் நாட்டின் அதிபர் இப்ராஹிம் ரைசி மற்றும் வெளியுறவுத்துறை மந்திரி அமீர் அப்துல்லா, மதகுரு அயதுல்லா முகமது அலி உள்ளிட்டோர் சென்ற ஹெலிகாப்டர் கடந்த 19-ந் தேதி விபத்தில் சிக்கியது. இதில் அதிபர் உள்ளிட்டவர்கள் இறந்ததாக அறிவிக்கப்பட்டது. தற்போது அந்த விபத்தைப் பற்றிய பல பரபரப்பு தகவல்களை அங்குள்ள அரசு டி.வி. சானல் ஒளிபரப்பி உள்ளது.
நேற்று முன்தினம் ஒளிபரப்பான அந்த நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்ட விவரங்கள் வருமாறு:-
ஈரானின் வடமேற்கு மாகாணமான கிழக்கு அஜர்பைஜானில், கோடா அபாரின் பகுதியில் புதிய அணை கட்டப்பட்டதை திறந்து வைக்க அதிபர் மற்றும் அமைச்சர்கள், மதகுரு உள்ளிட்டோர் அங்கு சென்றனர். அணையை திறந்துவைத்துவிட்டு 3 ஹெலிகாப்டர்களில் அவர்கள் திரும்பிக்கொண்டிருந்தனர். அமைச்சர்கள், அதிகாரிகள் சென்ற 2 ஹெலிகாப்டர்கள் பனிமூட்டமான வானிலையை சமாளித்து பத்திரமாக தரையிறங்கியது. ஆனால் அதிபர் ரைசி மற்றும் மதகுரு அயதுல்லா உள்ளிட்டோர் சென்ற ஹெலிகாப்டர் மட்டும் மலைக்காடுகளில் விழுந்து நொறுங்கியது.
அந்த விபத்தில் இறந்தவர்கள் அதிபர் ரைசி, வெளியுறவுத்துறை மந்திரி அமீர் அப்துல்லா, தொழுகை தலைவர் மதகுரு அயதுல்லா முகமது அலி, கிழக்கு அஜர்பைஜான் ஆளுநர் மாலேக் ரஹ்மதி, அதிபரின் பாதுகாப்பு குழு தளபதி மற்றும் 2 விமானிகள், விமான குழுவை சேர்ந்த ஒருவர்.
விபத்து நடந்த பிறகு சில மணி நேரங்களுக்கு மதகுரு அயதுல்லா முகமது அலி, உயிருடன் இருந்தார். அவர் தலைமை விமானி கர்னல் தாஹெர் முஸ்தபாவின் போன் அழைப்புக்கு பதில் அளித்தார். எரிசக்தி துறை அமைச்சர் அலி அக்பர், மதகுருவிடம் சம்பவம் குறித்து கேள்வி கேட்கும் காட்சிகளும் நிகழ்ச்சியில் இடம்பெற்றது.
அவர், நலம் விசாரித்த பின்பு, அதிபர் பற்றி கேள்வி கேட்கிறார். அப்போது மதகுரு அளித்த பதில் அவருக்கு திகைப்பைத் தர, முகபாவனையில் அதிர்ச்சியை வெளிப்படுத்துகிறார். “அப்படியானால் அவர்கள் உங்களைச் சுற்றி இல்லையா, நீங்கள் தனியாக இருக்கிறீர்களா” என்று அமைச்சர் கேட்கிறார்.
விபத்து நடந்த 14 மணி நேர தேடுதலுக்கு பிறகு, மே 20-ந் தேதி காலையில் ஹெலிகாப்டர் விழுந்த இடம் கண்டுபிடிக்கப்பட்டது. ஹெலிகாப்டரில் பறந்த அனைவரும் இறந்ததாக அறிவிக்கப்பட்டது. மே 24 ம் தேதியன்று வெளியான அரசு அறிக்கையில், “மலையில் மோதி ஹெலிகாப்டர் தீப்பிடித்ததாகவும், ஹெலிகாப்டரில் துப்பாக்கி தோட்டா தாக்குதல் போன்ற எந்தவிமான ஆதாரமும் இல்லை” என்றும் கூறப்பட்டு இருந்தது.
மேற்கண்ட தகவல்கள் டி.வி. ஒளிபரப்பில் இடம்பெற்றிருந்தன.