இஸ்ரேல்-காசா இடையே கடந்த அக்டோபர் 7-ந் தேதி போர் தொடங்கியது. 7 மாதங்களுக்கும் மேலாக இந்த போர் நடைபெற்று வருகிறது. இந்த போரை நிறுத்தும்படி உலக நாடுகள் பலவும் வலியுறுத்தி வருகின்றன. எனினும் போர் முடிவுக்கு வந்தபாடில்லை.
இதற்கிடையே கடந்த மாதம் ஹமாஸ் அமைப் பினர் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர்கள் உள்பட 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதனையடுத்து காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் மேலும் தீவிரப்படுத்தியது.
அதன் ஒருபகுதியாக ரபா நகரை முற்றுகையிட்ட இஸ்ரேல் ராணுவம் அங்கு பதுங்கி இருக்கும் ஹமாஸ் அமைப்பினர் முழுவதும் அழிக்கப்படும் வரை தாக்குதல் தொடரும் என அறிவித்தது.
அதன்படி காசாவின் ரபா நகரில் இஸ்ரேல் ராணுவம் நேற்று சரமாரி ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் சுமார் 40 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் பாலஸ்தீனியர்கள் தங்கியிருந்த முகாம் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 45 ஆக உயர்ந்துள்ளதாக காசா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன்படி இந்த தாக்குதலில் 23 பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் உட்பட 45 பேர் கொல்லப்பட்டதாகவும், 249 பேர் காயமடைந்ததாகவும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதனிடையே இந்த தாக்குதல் சம்பவத்தில் மேற்கு கரை பகுதியின் தலைமை நிர்வாக அதிகாரியான யாசின் ரபியாவும் பலியானதாக கூறப்படுகிறது. இவர் மேற்கு கரை பகுதியில் இருந்து இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துதல் மற்றும் நிதியுதவி செய்தது குறிப்பிடத்தக்கது.