அமெரிக்காவை பந்தாடிய புயலுக்கு குழந்தைகள் உள்பட 19 பேர் பலியாகினர். 100 பேர் படுகாயம் அடைந்தனர். மேலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் 5 லட்சம் பேர் இருளில் மூழ்கி தவிக்கும் நிலை ஏற்பட்டது.
அமெரிக்காவின் மத்திய பகுதியில் சக்தி வாய்ந்த புயல் தாக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி டெக்சாஸ், ஓக்லஹோமா, ஆர்கன்சாஸ் ஆகிய மாகாணங்களை புயல் பந்தாடியது.
அப்போது வெளியில் நின்று கொண்டிருந்த பல கார்களை புயல் கவிழ்த்து போட்டது. மேலும் அங்குள்ள ஏராளமான வீடுகளும் சேதம் அடைந்தன. இந்த கட்டிட இடிபாடுகளில் பலர் சிக்கிக்கொண்டனர்.இதனையடுத்து அங்கு விரைந்த மீட்பு படையினர் மீட்கும் பணியில் இறங்கினர். அப்போது கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்படடனர்.
இந்த சம்பவத்தில் பச்சிளம் குழந்தைகள் உள்பட 19 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 100-க்கும் மேற்பட்டோருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.மேலும் பலர் கட்டிட இடிபாடுகளில் சிக்கி இருப்பதாக கூறப்படுகிறது. எனவே அவர்களை மீட்கும் பணியில் மீட்பு படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே புயல் காரணமாக அங்கு ஏராளமான மரங்கள், மின்கம்பங்களும் முறிந்து விழுந்தன. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. எனவே சுமார் 5 லட்சம் பேர் இருளில் மூழ்கி தவித்தனர். இதனால் அங்கு இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது.