புத்தசாசனம் மற்றும் மத விவகாரங்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க கடும் இனவாதி என்றும், தமிழர் மரபுரிமைகளை அழிப்பதையே அவர் நோக்கமாக கொண்டுள்ளார் எனவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகத்தை பதவி விலக்கியதற்கு பதிலாக ஜனாதிபதி இவரை பதவி விலக்கியிருக்க வேண்டும். ஆனால் ஜனாதிபதிக்கு தைரியம் இல்லை. வடக்கு மற்றும் கிழக்கில் இனவாத முரண்பாடுகளுக்கு இவரே கதாநாயகன் என்று சாணக்கியன் கூறினார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (6) இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டத்தில் சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சு, புத்தசாசனம், சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செலவுத் தலைப்பு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றுகையில், “புத்தசாசனம் மற்றும் மத விவகாரங்கள் அமைச்சு மிக முக்கியமானது. இருப்பினும் இந்த அமைச்சு பற்றி பேசுவதில் பயனில்லை.
முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவின் அரசாங்கத்தில் இராஜாங்க அமைச்சராக பதவி வகித்துக் கொண்டு வடக்கு மற்றும் கிழக்கில் இனவாத செயற்பாடுகளில் ஈடுபட்ட இவர் புத்தசாசன அமைச்சராக பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.
இவர் கடும் இனவாதி.மலைகளை கண்டால் அவரால் இருக்க முடியாது. அங்கு ஓடிச் செல்வார். வெடுக்குநாறி மலை குருந்தூர் மலைக்கு ஓடி வந்தார். இனவாத முரண்பாடுகளை தோற்றுவித்தார். மட்டக்களப்பு மாவட்ட குசலான மலைக்கும் வந்தார். ஆனால் நாங்கள் அவரை அங்கு செல்லவிடவில்லை. ஒரு கிலோமீற்றர் தூரம் நடக்க வைத்து வழியனுப்பி வைத்தோம்.
இனவாத செயற்பாடுகளுக்காகவே புத்தசாசனம் அமைச்சும், தொல்பொருள் திணைக்களமும் பயன்படுத்தப்படுகிறது” எனத் தெரிவித்தார்.