ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியடைந்ததால் பெல்ஜியம் பிரதமர் அலெக்சாண்டர் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதேபோல் பிரான்சிலும் நாடாளுமன்றத்தை கலைப்பதாக அதிபர் இம்மானுவேல் மேக்ரான் அறிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்துக்கான நாடாளுமன்ற தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில் பிரான்ஸ், பெல்ஜியம் உள்பட 27 நாடுகள் கலந்து கொண்டன. இது இந்தியாவுக்கு அடுத்தபடியாக உலகின் 2-வது மிகப்பெரிய நாடாளுமன்ற தேர்தல் ஆகும். எனவே இந்த தேர்தல் அங்கு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இந்த தேர்தலில் பெல்ஜியம் நாட்டின் ஆளுங்கட்சியான பிளெமிஷ் தாராளவாதிகள் மற்றும் ஜனநாயக கட்சி படுதோல்வியை சந்தித்தது. இதில் அந்த கட்சி வெறும் 5.8 சதவீதம் வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது.
இந்த தேர்தலில் பிரதமர் அலெக்சாண்டர் டி குரூ தனது கட்சி வேட்பாளரை ஆதரித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார். எனினும் தேர்தலில் மிக மோசமாக தோல்வியை தழுவியதால் இதற்கு தான் முழு பொறுப்பேற்பதாக அவர் கூறினார்.
மேலும் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதாகவும் அவர் அறிவித்தார். அதன்படி பெல்ஜியம் மன்னர் பிலிப்பை சந்தித்து அவர் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கி உள்ளார். அவர் ஒப்புதல் அளித்தவுடன் பிரதமர் அலெக்சாண்டர் தனது பதவியில் இருந்து விலகுவார் என அங்குள்ள ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அதேபோல் பிரான்சிலும் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தலைமையிலான ஆளுங்கட்சி ஐரோப்பிய ஒன்றிய தேர்தலில் படுதோல்வியை சந்தித்தது. அவரது மறுமலர்ச்சி கட்சி சுமார் 15 சதவீதம் வாக்குகளை பெற்று தோல்வி அடைந்தது.
இதனால் நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு புதிய தேர்தலுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார். அதன்படி இந்த மாத இறுதியில் பொதுத்தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த மாதம் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடக்க உள்ளன. இந்தநிலையில் அதிபர் இம்மானுவேல் மேக்ரானின் இந்த முடிவு அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.