ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய அணி அடுத்ததாக தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது.
இதில் இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதலாவது போட்டி டர்பனில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒயிட்பால் (20 ஓவர், ஒருநாள் போட்டி) தொடரில் சீனியர் வீரர்களான விராட்கோலி, ஜஸ்பிரித் பும்ரா, கேப்டன் ரோகித் சர்மா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
கணுக்கால் காயத்தில் இருந்து மீளாததால் 20 ஓவர் போட்டி அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா விலகி விட்டார். இதனால் அண்மையில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் தொடருக்கு கேப்டனாக இருந்த அதிரடி ஆட்டக்காரர் சூர்யகுமார் யாதவ் தலைமையில் இந்திய அணி களம் காண்கிறது. ஒருநாள் போட்டி அணிக்கு லோகேஷ் ராகுலும், டெஸ்ட் அணிக்கு ரோகித் சர்மாவும் கேப்டனாக இருப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேட்டிங் மற்றும் வேகப்பந்து வீச்சுக்கு அனுகூலமான டர்பன் ஆடுகளம் இந்திய வீரர்களுக்கு சவால் அளிப்பதாக இருக்கும். இருப்பினும் சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் தொடரை வென்ற இந்திய இளம் படை வெற்றியுடன் தொடரை தொடங்க தீவிரம் காட்டும். அதேநேரத்தில் உள்ளூர் சூழலை சாதகமாக பயன்படுத்தி ஆதிக்கம் செலுத்த தென்ஆப்பிரிக்கா எல்லா வகையிலும் முயற்சிக்கும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
இவ்விரு அணிகளும் சர்வதேச 20 ஓவர் போட்டியில் இதுவரை 24 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 13-ல் இந்தியாவும், 10-ல் தென்ஆப்பிரிக்காவும் வெற்றி பெற்று இருக்கின்றன. ஒரு ஆட்டம் முடிவு இல்லாமல் போனது..
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல்:-
இந்தியா: யாஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில் அல்லது ருதுராஜ் கெய்க்வாட், ஸ்ரேயாஸ் அய்யர், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ரிங்கு சிங், ஜிதேஷ் ஷர்மா, ரவீந்திர ஜடேஜா, ரவி பிஷ்னோய் அல்லது குல்தீப் யாதவ், முகமது சிராஜ், முகேஷ் குமார், அர்ஷ்தீப் சிங்.
தென்ஆப்பிரிக்கா: ரீஜா ஹென்ரிக்ஸ், மேத்யூ பிரீட்கே, மார்க்ரம் (கேப்டன்), ஹென்ரிச் கிளாசென் அல்லது டிரிஸ்டான் ஸ்டப்ஸ், டேவிட் மில்லர், டோனோவான் பெரீரா, மார்கோ யான்சென் அல்லது பெலுக்வாயோ, கேஷவ் மகராஜ், ஜெரால்டு கோட்ஜி, நன்ரே பர்கர், தப்ரைஸ் ஷம்சி.