நாடாளுமன்றத்தில் வரும் 23-ந்தேதி மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் 2024-25 மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். இந்த நிலையில், 2014-ம் ஆண்டு முதல் இந்தியா குறைந்த முதலீட்டின் சுழற்சியில் சிக்கித் தவிக்கிறது என காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-
“2014-ம் ஆண்டு முதல் இந்தியா குறைந்த முதலீட்டின் சுழற்சியில் சிக்கித் தவிக்கிறது. இது ஒழுங்கற்ற கொள்கை மற்றும் மத்திய விசாரணை அமைப்புகளின் ரெய்டுகளால் ஆன ஆட்சியால் ஏற்பட்ட நிலையாகும்.
குறைந்த முதலீட்டு நிலைகள் காரணமாக நடுத்தர மற்றும் நீண்ட கால மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதங்கள் குறைகின்றன. இது ஊதியங்கள் மற்றும் நுகர்வு வளர்ச்சியைக் குறைக்கிறது.
முதலீட்டின் மிகப்பெரிய அங்கமான ‘தனியார் உள்நாட்டு முதலீடு’ 2014 முதல் மந்தநிலையில் உள்ளது. இது மன்மோகன் சிங்கின் ஆட்சிக் காலத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தி வரம்பில் 25 முதல் 30 சதவீதமாக இருந்தது. ஆனால் தற்போது இது மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வரம்பில் 20 முதல் 25 சதவீதமாக உள்ளது.
2016-ம் ஆண்டு முதல், உலகெங்கிலும் உள்ள பல தேசிய நிறுவனங்கள் சீனாவிலிருந்து விலகி மற்ற வளரும் நாடுகளில் முதலீடு செய்ய தொடங்கின. இந்தியா, சரியான நேரத்தில் சரியான இடத்தில் இருந்தது. ஆனால் அந்நிய நேரடி முதலீட்டைப் பெறுவதற்கும், உற்பத்தி மற்றும் ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரமாக மாறுவதற்குமான வாய்ப்பு வீணடிக்கப்பட்டுள்ளது.
வங்காளதேசம் மற்றும் வியட்நாம் போன்ற நாடுகள் நன்மைகளை பெற்றுள்ளன. இந்தியாவிற்கான தேவை என்பது விளிம்பு நிலை கொள்கை அல்ல, மாறாக அரசியல் பொருளாதாரத்திற்கான புதிய, தாராளமயமாக்கப்பட்ட அணுகுமுறையே ஆகும்.”
இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.