Sunday, September 8, 2024
Google search engine
Homeஇந்தியாடெல்லியில் இன்று 'நிதி ஆயோக்' கூட்டம்: இந்தியா கூட்டணி முதல்-மந்திரிகள் புறக்கணிப்பு

டெல்லியில் இன்று ‘நிதி ஆயோக்’ கூட்டம்: இந்தியா கூட்டணி முதல்-மந்திரிகள் புறக்கணிப்பு

பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் டெல்லியில் இன்று (சனிக்கிழமை) நடக்கிறது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதல்-மந்திரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஒரு சில யூனியன் பிரதேசங்களில் மட்டும் துணை நிலை கவர்னர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதற்கான ‘விக்சித் பாரத் 2047’ திட்டம் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே நாடாளுமன்றத்தில் கடந்த 23-ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டதாக இந்தியா கூட்டணி தலைவர்கள் குற்றம் சாட்டினர். இதனையடுத்து, பட்ஜெட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக நிதி ஆயோக் கூட்டத்தை இந்தியா கூட்டணி தலைவர்கள் புறக்காணிப்பார்கள் என அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்புக்கு முன்னதாகவே, நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்ளபோவதில்லை என தமிழக முதல்-அமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்தார். அவரை தொடர்ந்து கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா, தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி, இமாசலபிரதேச முதல்-மந்திரி சுக்விந்தர் சுகு உள்ளிட்டோரும் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக அறிவித்தனர்.எனினும் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் முக்கிய தலைவரான மேற்குவங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பாரா? என்பது கேள்வி குறியாகவே இருந்தது.

இந்த நிலையில் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதாக மம்தா பானர்ஜி நேற்று அறிவித்தார். டெல்லிக்கு புறப்படுவதற்கு முன் கொல்கத்தா விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மம்தா, “நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொண்டு, பாரபட்சமான பட்ஜெட்டுக்கு எனது எதிர்ப்பையும், கண்டனத்தையும் தெரிவிப்பேன்” என கூறினார்.

மேலும் அவர், “கூட்டத்துக்கு 7 நாட்களுக்கு முன்பு எனது எழுத்துப்பூர்வ உரையை அனுப்புமாறு கேட்டுக் கொண்டனர். அதன்படி எனது உரையை அனுப்பினேன். அதாவது, மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பே எனது உரையை அனுப்பிவிட்டேன். இப்போது கூட்டத்தில் எனது உரையை ஆற்றி, வங்காளத்தையும் அதன் அண்டை மாநிலங்களையும் பிரிக்க தீட்டப்படும் சதி, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு எதிரான பாரபட்சம் மற்றும் அரசியல் சார்புக்கு எதிரான எனது கண்டனத்தை பதிவு செய்ய வாய்ப்பு கிடைத்தால், அதைச் செய்வேன். இல்லையேல் கூட்டத்தில் இருந்து வெளியேறுவேன்” என தெரிவித்தார்.

அதேபோல் அருணாசலபிரதேச முதல்-மந்திரி பெமா காண்டு மற்றும் துணை முதல்-மந்திரி சவுனா மெய்ன் ஆகியோர் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்வதாக அறிவித்துள்ளனர். கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்ளமாட்டார் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. எனினும் இந்த முடிவு பட்ஜெட்டுக்கு முன்பாகவே எடுக்கப்பட்டதாகவும், கூட்டத்தில் பங்கேற்க முடியாதது குறித்து பினராயி விஜயன் பிரதமர் மோடிக்கு ஏற்கனவே கடிதம் அனுப்பியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் முதல்-மந்திரிக்கு பதிலாக மாநில நிதி மந்திரி பாலகோபால் கூட்டத்தில் பங்கேற்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments