காசாவில் இஸ்ரேலுக்கும் ஹமாசுக்கும் இடையே தொடர்ந்து 66வது நாளாகப் போர் நடைபெற்று வரும் நிலையில், ஹமாஸ் மீது தாக்குதல் நடத்த இஸ்ரேலியப் படைகள் விடாப்பிடியாக இருந்து வருகிறது. இந்த போரில் காசாவில் மட்டும் பலியானவர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
இந்நிலையில், பயங்கரவாத குழு ‘இப்போதே சரணடைய வேண்டும்’ என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அழைப்பு விடுத்துள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள காணொலி காட்சியில் பேசிய நெதன்யாகு, “கடந்த சில நாட்களில், டஜன் கணக்கான ஹமாஸ் பயங்கரவாதிகள் எங்கள் படைகளிடம் சரணடைந்துள்ளனர். அவர்கள் தங்கள் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு தங்களை நமது வீரர்களாக மாற்றிக் கொள்கிறார்கள். இதற்கு நேரம் எடுக்கும். போர் இன்னும் நடந்து கொண்டிருக்கிறது, ‘இது ஹமாசின் முடிவின் ஆரம்பம்’.. நான் ஹமாஸ் பயங்கரவாதிகளிடம் சொல்கிறேன்.. சின்வாருக்காக சாகாதீர்கள். இப்போதே சரணடையுங்கள்” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
முன்னதாக ஹமாஸ் வசம் உள்ள பணய கைதிகளை விடுவிப்பதற்காக இஸ்ரேல் காசாவில் 7 நாட்களுக்கு போரை நிறுத்தியது. இதனால் சற்று நிம்மதியடைந்த காசா மக்கள் போர் நிரந்தரமாக நிறுத்தப்பட்டு தங்களின் வாழ்வு இயல்பு நிலைக்கு திரும்பும் என நம்பியிருந்தனர். ஆனால் இஸ்ரேலோ மீண்டும் போரை தொடங்கி காசா மக்களின் நம்பிக்கையை தகர்த்தது. அதுமட்டும் இன்றி முன்பை விட முழு வேகத்துடனும், ஆக்ரோஷத்துடனும் காசாவை இஸ்ரேல் தாக்கி வருகிறது.
மனிதாபிமான அடிப்படையில் போரை நிறுத்தக்கோரி சர்வதேச நாடுகள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறபோதும் இஸ்ரேல் அதை புறக்கணித்து நாளுக்குநாள் தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகிறது.
போர் தொடங்கியது முதலே இஸ்ரேலுக்கு ஆதரவாக இருந்து வரும் அமெரிக்கா அந்த நாட்டுக்கு தொடர்ந்து ராணுவ உதவிகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் புதிய தொகுப்பாக 100 மில்லியன் டாலர் (சுமார் ரூ.834 கோடி) மதிப்புடைய ராணுவ தளவாடங்களை இஸ்ரேலுக்கு அமெரிக்க வழங்கியுள்ளது. அதன்படி அமெரிக்காவின் ஆயுத உதவியுடன் போரில் தாங்கள் தொடர்ந்து முன்னேறி வருவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இதனிடையே ராணுவ மற்றும் தூதரக ரீதியிலான ஆதரவுக்காக அமெரிக்காவுக்கு நன்றி தெரிவித்துள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாகு, ஹமாஸ் அமைப்பை ஒழிக்கும் வரை போர் தொடரும் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.