விஜய் ஹசாரே டிராபிக்கான கிரிக்கெட் தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் லீக் ஆட்டங்கள் மற்றும் முதன்மை காலிறுதி ஆட்டங்களின் முடிவில் அரியானா, பெங்கால், ராஜஸ்தான், கேரளா, விதர்பா, கர்நாடகா, மும்பை, தமிழ்நாடு ஆகிய 8 அணிகள் காலிறுதி சுற்றுக்கு முன்னேறின.
இந்த தொடரின் காலிறுதி ஆட்டங்கள் நேற்று நடைபெற்றன. இதில் முதலாவது காலிறுதி ஆட்டத்தில் அரியானா – பெங்கால் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய பெங்கால் அணி 50 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 225 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.
பெங்கால் தரப்பில் ஷபாஸ் அகமது 100 ரன்கள் அடித்தார். இதையடுத்து 226 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய அரியானா அணி 45.1 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 226 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது.
அரியானா தரப்பில் அங்கித் குமார் 102 ரன்கள் அடித்தார். அரியானா அணி அரையிறுதி ஆட்டத்தில் தமிழக அணியை எதிர்கொள்கிறது. மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் ராஜஸ்தான் – கர்நாடகா அணிகள் மோத உள்ளன.