யாழ்ப்பாணத்தில் DJ Night என்ற பெயரில் களியாட்ட நிகழ்வுகளை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்த வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ச.சுகிர்தன், அனுமதியின்றி நடாத்தப்பட்ட நிகழ்விற்கு எதிராக யாழ். மாநகர சபை வழக்கு தொடர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
கொக்குவிலில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று (11) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
“ DJ Night என்ற பெயரில் களியாட்ட நிகழ்வொன்று யாழ்ப்பாணம் ரில்கோ விடுதியில் நடாத்தப்பட்டுள்ளது. கடந்த முறை சர்ச்சை எழுந்தபோது வியாபாரம் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக விடுதியின் பெயரை நாம் குறிப்பிடவில்லை.
ஆனால், கடும் எதிர்ப்புகள் வந்த போதும் யாழ். மாநகர சபையின் அனுமதியையும் மீறி DJ Night என்ற பெயரில் களியாட்ட நிகழ்வு மீளவும் நடத்தப்பட்டதாக அறிகிறோம்.
இவ்வாறாக சமூகத்தை சீரழித்து வருமானம் உழைப்பதை இவர்கள் கைவிடவேண்டும். இதற்கு எதிராக நாம் போராட வேண்டிய சூழல் வரும்.
குறித்த நிகழ்வுக்கு யாழ். மாநகர சபையிடம் அனுமதி கோரப்பட்டு நிராகரிக்கப்பட்ட நிலையில் அந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. இது சட்டவிரோதமான செயற்பாடு.
இதற்கு எதிராக மாநகர சபை நடவடிக்கை எடுக்க முடியும். அனுமதியின்றி நடாத்தப்பட்ட நிகழ்விற்கு எதிராக யாழ் மாநகர சபை வழக்குத் தொடர வேண்டும்.
குறித்த விடயத்தில் சமூக நலனில் அக்கறை கொண்ட அனைவரும் ஒன்று திரண்டு எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்தார்.