Monday, December 23, 2024
Google search engine
Homeசினிமாகோட் - திரை விமர்சனம்!

கோட் – திரை விமர்சனம்!

விரவாத ஒழிப்புத் துறையில் அதிகாரியாக இருக்கும் காந்தி (விஜய்) பல தீவிரவாத சதிகளை முறியடிக்கும் சிறப்பு ஏஜெண்டாக இருக்கிறார். அப்படி, கென்யாவில் தீவிரவாத செயல்களைச் செய்பவர்களை தன் குழுவுடன் (பிரபு தேவா, பிரஷாந்த், அஜ்மல்) அழிக்கிறார். அதேநேரம், அமைதியான குடும்பத் தலைவனாக மனைவி (ஸ்னேகா), மகனுடன் வாழ்ந்து வருகிறார். எதிர்பாராத நிகழ்வுபோல், தாய்லாந்த்தில் இன்னொரு தீவிரவாத திட்டத்தை முறியடிக்கக் குடும்பத்துடன் செல்கிறார். அங்கு வேறு பிரச்னை வருகிறது. அது என்ன? என்பதிலிருந்து கதை சூடுபிடிக்கிறது. தொடர்ந்து, தன்னைச் சுற்றி தொடர்பே இல்லாமல் நடக்கும் விசயங்களைச் செய்வது யாரென காந்தி கண்டுபிடித்தாரா இல்லையா என்பதே கிரேட்டஸ் ஆஃப் ஆல் டைம்.

இயக்குநர் வெங்கட் பிரபு தமிழ் ரசிகர்களுக்குப் பெரிய திரையனுவத்தைத் தர வேண்டுமென்பதில் உறுதிகாட்டியிருப்பது தெரிகிறது. வெறும் கமர்சியல் திரைப்படமாக மட்டுமே நின்றுவிடாமல் திரைக்கதையில் நான் லீனியர் பாணியின் மூலம் அடுத்தது என்ன என்கிற ஆர்வத்தில் வைக்க முயன்றிருக்கிறார். வயதான விஜய், இளவயது விஜய் என இதுவரை தமிழில் செய்யாத முயற்சியாகவே டீஏஜிங் தொழில்நுட்பத்தை அசத்தலாக பயன்படுத்தியிருக்கிறார்கள். இனி தமிழில் உருவாகும் டீஏஜிங் படங்களுக்கு கோட் படமே முன்னோடியாக இருக்கப்போகிறது. முக்கியமாக, இளவயது விஜய் கதாபாத்திரம். ஆனால், சிறுவயது விஜய்யை டிஏஜிங் என்கிற பெயரில் சொதப்பியிருக்கிறார்கள்.

நடிகர் விஜய்யின் ரசிகர்களைப்போலவே நமக்கும் ஏன் தொடர்ந்து நடிக்கலாமே? என்கிற எண்ணமே தோன்றுகிறது. வசனமாகட்டும், கணவனாக, தந்தையாக என பல பரிணாமங்களிலும் அழகான நடிப்பை வழங்கியிருக்கிறார். எங்கும், சலிக்காத முகமாக இருப்பதுதான் அவரின் பலமாகவும் இருக்கிறது. தந்தை காந்திக்கும், மகனுக்கும் பெரிய வித்யாசங்களை விஜய் கொடுத்திருக்கிறார். ஆக்சன், நடிப்பு, நடனமென அனைத்து தரப்பிலும் குறையே வைக்காத நடிகராகவே இதிலும் தொடர்கிறார். ஆனால், சில வசனங்கள் அவரது நடிப்புக்கு எதிராக இருக்கின்றன.

சண்டைக் காட்சிகளிலும் ஆக்சன் ஹீரோவாக கச்சிதமாகப் பொருந்துகிறார். குறிப்பாக, தாய்லாந்து கார் துரத்தல் மெட்ரோ ரயில் சண்டைக்காட்சி உள்ளிட்டவை நன்றாக இருந்தன.

நடிகர் விஜய்யை வைத்தே பல காட்சிகள் திட்டமிடப்பட்டிருக்கிறது. ஆனாலும், நடிகர்கள் பிரபு தேவா, பிரஷாந்த், ஜெயராம், மோகன், யோகிபாபு, பிரேம்ஜி ஆகியோருக்கும் முக்கியமான இடங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை, அவர்கள் சரியாகவே பயன்படுத்தியுள்ளனர். நயன்தாரா, த்ரிஷா போல் வலுவான கதாபாத்திரங்கள் கிடைக்கவில்லை என்றாலும் சினேகாவுக்கான வாய்ப்புகளைக் கொடுக்கலாம். இன்னும் அவரிடமிருக்கும் வசீகரம் விலகவில்லை.

யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவான பாடல்கள் வெளியானபோது இல்லாத சுவாரஸ்யம் திரைப்படமாக பார்க்கும்போது ரசிக்க வைக்கின்றன. குறிப்பாக, விசில் போடு மற்று மட்ட பாடல்கள். அதிரடியான பின்னணி இசைகள் காதைக் கிழிக்காமல் கதையொடு ஒன்றச் செய்கின்றன. யுவன் ஷங்கர் ராஜா இன்றும் தனித்தே தெரிவதற்கு அவரது பாணி இசையமைப்பே காரணம் என்பதை கோட்டிலும் உணர முடிகிறது.

முதல்பாதியில் முழுக்க கதை என்னவாக இருக்கும் என்பதிலிருக்கும் ஆர்வம், இரண்டாம் பாதியில் இல்லை. சஸ்பென்ஸ் காட்சிகள்கூட ஊகிக்கும்படியாகவே இருக்கின்றன. அடுத்தது என்ன என வெங்கட் பிரபு போன்ற இயக்குநர்கள் சிந்திக்க வைப்பார்கள் என்று படத்தைப் பார்த்தால் பல இடங்களில் ஏமாற்றமே மிஞ்சுகிறது.

மூன்று மணி நேரத் திரைப்படத்தை சோர்வடையாமல் கொண்டு செல்வது சாதாரணமானது அல்ல. எங்காவது பொறுமையைச் சோதிக்கும் இடங்கள் இருக்கும். இப்படத்தில் பல இடங்கள் உள்ளன. கதையின் ஆர்வத்தில் சரியாகும் என நினைத்தால்… நினைக்க மட்டும்தான் முடிகிறது. சில வசனங்களும், நகைச்சுவையும் சலிப்பைத் தருகின்றன.

சஸ்பென்ஸ் என நினைத்து இவர்கள் வைத்த காட்சியிலும் எந்த ஆர்வமும் எழவில்லை. சாதாரணமாகக் கடந்து செல்கின்றன. பிரபல நடிகை குத்தாட்டம் ஆடியிருக்கிறார். அதுதான் கைதட்டல்களைப் பெறுகிறது.

திரில்லர், டீஏஜிங் என படம் முழுவதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் திருப்பங்கள் இருந்தும் திரைக்கதையால் பல காட்சிகள் ரசிகர்களால் சுலபமாக ஊகிக்கக்கூடியவையாகவே இருக்கின்றன். ஒரே ஆறுதல், டீஏஜிங் விஜய்யும் அவரது கதாபாத்திர வடிவமைப்புமே.

முழுநேர அரசியலுக்கு வருவதற்கு முன் அட்டகாசமான படமொன்றில் நடித்துவிட வேண்டும் என அனைவரும் நினைக்கக் கூடியதுதான். ஆனால், நடக்க வேண்டுமே? விஜய்க்கு அது கைகூடவில்லை. அவரது வெற்றிப்படங்களில் ஒன்றாக இருக்கலாம். ஆனால், சிறந்த படங்களின் பட்டியலில் இல்லை. மொத்தத்தில் எப்படியிருக்கிறது? படத்தின் தயாரிப்பாளரே சொன்னதுபோல், படம் முடிந்து வெளிவருகையில் ‘என்னடா பண்ணி வச்சுருக்கீங்க?’ என பலரும் நினைப்பார்கள். முக்கியமாக, விஜய் ரசிகர்கள்!

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments