அண்மையில் புது தில்லியில், இருவரையும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி சந்தித்துப் பேசியிருந்த நிலையில், இன்று மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, வீராங்கனை வினேஷ் போகத் இருவரும் கட்சியில் முறைப்படி இணைந்துள்ளனர்.
தில்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் கே.சி. வேணுகோபால் முன்னிலையில், பஜ்ரங் புனியா மற்றும் வினேஷ் போகத் இருவரும் கட்சியில் இணைந்தனர்.
ஹரியாணா மாநில சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டு, வினேஷ் போகத் தேர்தலில் போட்டியிடுவார் என தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், இன்று அவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். இதன் மூலம், அவர் காங்கிரஸ் சார்பில் தேர்தலில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, வினேஷ் போகத் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில், வடக்கு ரயில்வே பணியை ராஜிநாமா செய்த கடிதத்தை இணைத்திருந்தார். ரயில்வேயில் பணியாற்றியது எனது வாழ்நாளில் மறக்க முடியாத மற்றும் பெருமைகொள்ளத் தக்க விஷயம், தற்போது இந்திய ரயில்வேயிலிருந்து என்னை பிரித்துக்கொள்வதற்கான நேரம் வந்துவிட்டது என்று கூறியிருந்தார்.
நடந்து முடிந்த ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், 100 கிராம் கூடுதலாக உடல் எடை இருந்தார் என்று கூறி தகுதி நீக்கம் செய்யப்பட்டார். மன வேதனையில், அவர் மல்யுத்த விளையாட்டிலிருந்தே ஓய்வுபெறுவதாக அறிவித்திருந்தார்.
இது நாட்டு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், ஒட்டுமொத்தநாடும் வினேஷ் போகத்துக்கு ஆறுதல் கூறி, நாங்கள் இருக்கிறோம் என ஒருமித்த குரலில் வினேஷ் போகத் இயல்பு நிலைக்குத் திரும்ப வழிவகை செய்தது. சிறப்பான வரவேற்பு கொடுத்து, உங்களுக்கு எதற்கு பதக்கம், நீங்களே எங்கள் பதக்கம் என்று கொண்டாடினர் நாட்டு மக்கள்.