லிங்கன் எலக்ட்ரிக் நிறுவனத்துடன் ரூ. 500 கோடி முதலீட்டில் செங்கல்பட்டு மாவட்டத்தில் லிங்கன் எலக்ட்ரிக் நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, உற்பத்தி மையத்தை விரிவாக்கம் செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாக விளங்கி வரும் தமிழ்நாட்டினை, 2030-ஆம் ஆண்டிற்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர்
என்கிற பொருளாதார இலக்கை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு நிர்ணயித்து, அதற்கான முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் நோக்கத்துடனும், மாநிலத்தில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்துவதற்காகவும் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் அமெரிக்க நாட்டில் அரசு முறைப் பயணம் மேற்கொண்டு வருகிறார்.
அந்த வகையில், ஒவ்வொரு நாளும் பல கோடி மதிப்பிலான திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களுக்கு, முதல்வர் ஒப்புதல் அளித்து வருகிறார்.
சான் பிரான்சிஸ்கோ மற்றும் சிகாகோவில் உலகில் 10 முன்னணி தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வெல்டிங் பொருட்கள், ஆர்க் வெல்டிங் உபகரணங்கள், வெல்டிங் பாகங்கள், பிளாஸ்மா மற்றும் ஆக்ஸி-எரிபொருள் வெட்டும் உபகரணங்கள், ரோபோடிக் வெல்டிங் பொருட்களின் உலகளாவிய உற்பத்தி நிறுவனம் லிங்கன் எலக்ட்ரிக் நிறுவனம். இது பார்ச்சூன் 1000 நிறுவனங்களில் ஒன்றாகும்.
இந்நிறுவனம் வட அமெரிக்கா, ஐரோப்பா, மத்திய கிழக்கு, ஆசியா மற்றும் லத்தீன் அமெரிக்காவில் 160-க்கும் மேற்பட்ட நாடுகளையும் 42 உற்பத்தி இடங்களையும் உள்ளடக்கிய உலகளாவிய விநியோகஸ்தர்கள் மற்றும் விற்பனை அலுவலகங்களின் வலையமைப்பைக் கொண்டுள்ளது. இந்நிறுவனத்தின் உலகளாவிய தலைமையகம் அமெரிக்க நாட்டின் ஓஹியோவின் யூக்லிட்டில் அமைந்துள்ளது.
முதல்வர் முன்னிலையில், லிங்கன் எலக்ட்ரிக் நிறுவனத்திற்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையே ரூ.500 கோடி முதலீட்டில் செங்கல்பட்டு மாவட்டத்தில் லிங்கன் எலக்ட்ரிக் நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, உற்பத்தி மையத்தை விரிவாக்கம் செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்வில், லிங்கன் எலக்ட்ரிக் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திரு. சிவபாதசுந்தரம் காஜா, முதுநிலை துணைத் தலைவர் கிரெக் டோரியா மற்றும் உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.