லெபனானில் இஸ்ரேல் தொடர்ந்து சரமாரியாக குண்டு வீச்சு தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் அங்கு பலி எண்ணிக்கை 569 ஆக உயர்ந்துள்ளது.
பாலஸ்தீனத்தின் காசா நகரை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்புக்கும் இஸ்ரேலுக்கும் இடையே கிட்டத்தட்ட ஓர் ஆண்டாக போர் நடந்து வருகிறது. இது ஒருபுறமிருக்க இந்த போர் தொடங்கிய நாளில் இருந்து லெபனானை சேர்ந்த ஹிஸ்புல்லா அமைப்பினருக்கும், இஸ்ரேலுக்கும் இடையே கடுமையான மோதல்கள் நடந்து வருகின்றன.
இந்த சூழலில் கடந்த வாரம் லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்தி வந்த நூற்றுக்கணக்கான பேஜர்கள் மற்றும் வாக்கி டாக்கிகள் ஒரே சமயத்தில் வெடிக்க செய்யப்பட்டன. இந்த கொடூர தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் என 37 பேர் பலியாகினர். 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
இந்த தாக்குதல்களை இஸ்ரேல் நடத்தியதாக குற்றம் சாட்டிய ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் நாட்டின் மீது நூற்றுக்கும் மேற்பட்ட ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக லெபனான் மீது இஸ்ரேல் வான்தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தளபதி இப்ராஹிம் அகில் உள்பட பலர் கொல்லப்பட்டனர்.
இதனால் கொந்தளிப்புக்கு ஆளான ஹிஸ்புல்லா அமைப்பினர் மீண்டும் இஸ்ரேல் மீது 150-க்கும் அதிகமான ராக்கெட் குண்டுகளை வீசி தாக்கினர். இவற்றில் பெரும்பாலானவற்றை இடைமறித்து அழித்துவிட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது.
இதனையடுத்து லெபனான் மீது இதுவரை இல்லாத அளவுக்கு மிகவும் பயங்கரமான வான்வழி தாக்குதலை இஸ்ரேல் நேற்று முன்தினம் முதல் நடத்தி வருகிறது. அங்கு 300-க்கும் மேற்பட்ட இலக்குகளை குறிவைத்து இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டுமழை பொழிந்தன.
இதில் 500-க்கும் மேற்பட்டோர் பலியானதாவும், 400-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்ததாகவும் தகவல் வெளியாகி இருந்தது.
இந்த நிலையில் லெபனானில் நேற்றும் இஸ்ரேல் சரமாரியாக வான்தாக்குதல் நடத்தியது. போர் விமானங்கள் குண்டுமழை பொழிந்ததில் ஏராளமான கட்டிடங்கள் தரைமட்டமாகின.
இந்த சூழலில் லெபனானில் இஸ்ரேல் நடத்திய வான்தாக்குதல்களில் பலியானோரின் எண்ணிக்கை தற்போது 569 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 50 பேர் சிறுவர்கள், 90 பேர் பெண்கள் ஆவர். மேலும் படுகாயம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 1,835 ஆக அதிகரித்துள்ளது. அவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது.
* தெற்கு பெய்ரூட்டில் நடந்த தாக்குதலுக்குப் பிறகு தளபதி இப்ராகிம் முகமது கோபிசியின் மரணத்தை ஹிஸ்புல்லா அறிவித்துள்ளது.
* லெபனானில் இருந்து 5 லட்சத்திற்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.