மும்பையில் கடந்த 23-ந்தேதி முதல் 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்து வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது. இதன்பேரில் நேற்று முன்தினம் இரவு நகரின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. நேற்று காலை 8.30 மணி முடிவடைந்த 24 மணி நேரத்தில் 7 செ.மீ மழை மும்பையில் பதிவாகி உள்ளது. மும்பை உள்பட தானே, பால்கர், நவிமும்பை ஆகிய இடங்களில் லேசான மழை பெய்தது.
இதன் காரணமாக மும்பையில் முல்லுண்ட், பாண்டுப், நாகூர், காஞ்சூர்மார்க் ஆகிய இடங்களில் உள்ள தாழ்வான இடங்களில் வெள்ளம் தேங்கி பெருக்கெடுத்து ஓடியது. இருப்பினும் ரெயில் மற்றும் சாலை போக்குவரத்து எதுவும் பாதிக்கப்பட வில்லை. இது பற்றி வானிலை ஆய்வு மைய அதிகாரி தெரிவிக்கையில் மத்திய வங்க கடலில் ஏற்பட்ட சூறாவளி சூழற்சியின் காரணமாக குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளது.
இதனால் இன்றும் மும்பையில் ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. இந்த எச்சரிக்கை காரணமாக அதிக மழையை எதிர்பார்க்கலாம் என அவர் தெரிவித்தார். இதனிடையே கனமழை காரணமாக இன்று மும்பையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. நேற்று பெய்த கனமழையால் பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்துள்ளனர். மும்பை விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் போன 14 விமானங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன.