பெங்களூரு வயாலிகாவலில் வாடகை வீட்டில் வசித்தவர் மகாலட்சுமி (வயது 29). இவர் திருமணமாகி கணவர் ஹேமந்த் தாசை 9 மாதங்களாக பிரிந்து வாழ்ந்தார். கடந்த 21-ந் தேதி தனது வீட்டின் பிரிட்ஜில் மகாலட்சுமியின் உடல் பாகங்கள் 59 துண்டுகளாக வெட்டப்பட்டு வைக்கப்பட்டு இருந்தன. மர்மநபர்கள், அவரை கொலை செய்துவிட்டு உடலை துண்டு, துண்டாக வெட்டி பிரிட்ஜில் வைத்துவிட்டு தப்பி சென்றிருந்தனர்.
இதுகுறித்து வயாலிகாவல் போலீஸ் நிலையத்தில் வழக்குப் பதிவாகி உள்ளது. கொலையாளிகளை பிடிக்க துணை போலீஸ் கமிஷனர் சேகர் தலைமையில் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில், மகாலட்சுமியை, வணிகவளாகத்தில் உள்ள கடையில் சக ஊழியராக வேலை செய்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த முக்தி ராஜன் பிரதாப் ராய் (28) தான் தீர்த்துக்கட்டி இருப்பது உறுதியாகி இருந்தது.
அடுத்து நடந்த போலீசாரின் விசாரணையின் போது முக்தி ராஜன் செல்போன் முதலில் மேற்கு வங்காள மாநிலத்தில் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் அந்த மாநிலத்திற்கு தனிப்படை போலீசார் சென்றிருந்தனர். பின்னர் அவர் தனது சொந்த மாநிலமான ஒடிசாவில் தனது சொந்த ஊரையொட்டிய காட்டுப்பகுதியில் அவர் பதுங்கியிருப்பதாக தகவல் தெரிந்தது. உடனே போலீசார் அங்கு சென்று முக்தி ராஜனை நேற்று முன்தினம் மாலை தீவிரமாக தேடினர். ஆனால் யாரும் எதிர்பாராத வகையில், முக்தி ராஜன் அங்குள்ள மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இதை பார்த்து தனிப்படை போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
போலீசார் தன்னை நெருங்கி வருவதை அறிந்த முக்தி ராஜன் போலீசில் சிக்காமல் இருக்க தற்கொலை செய்ய முடிவு செய்ததாகவும், அதன்படி அவர் தற்கொலை செய்ததும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. உள்ளூர் போலீசார் உதவியுடன் தனிப்படை போலீசார் மேல்விசாரணை நடத்தி வருகிறார்கள்.