பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலைக்கான உத்தரவாதம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த பிப்ரவரி மாதம் விவசாயிகள் டெல்லி நோக்கி பேரணியாக புறப்பட்டனர். இந்த பேரணியின் முடிவில் டெல்லியில் போராட்டம் நடத்தவும் திட்டமிட்டனர். இதற்காக விவசாயிகள் நீண்ட கால போராட்டத்திற்கு தேவையான பொருட்களுடன் பஞ்சாப் மாநிலத்தில் இருந்து டிராக்டர்களில் பேரணியாக டெல்லி நோக்கி வரத் தொடங்கினர்.
ஆனால் அவர்களை பஞ்சாப்-அரியானா இடையே உள்ள ஷம்பு மற்றும் கனவுரி எல்லைகளில் போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் விவசாயிகள் அங்கேயே கூடாரங்கள் அமைத்தும், டிராக்டர்களை கூடாரமாக மாற்றியும் தங்கியிருந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகளை தடுப்பதற்காக எல்லையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கனவுரி எல்லையில் குர்மீத் சிங் (வயது 52) என்ற விவசாயி, டிராக்டர் டிரெய்லரின் கூடாரத்தில் இன்று தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
இறந்துபோன குர்மீத் சிங்கின் சொந்த ஊர், மன்சா மாவட்டத்தில் உள்ள துதியன்வாலி கிராமம் ஆகும். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.
அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக சமனா சிவில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. நாளை பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. அதன்பின்னர் அவரது சொந்த கிராமத்தில் உடல் தகனம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இறுதிச்சடங்கில் பி.கே.யு. (சித்துபூர்) சங்கத்தின் மாநிலத் தலைவர் ஜக்ஜித் சிங் தல்லேவால் உட்பட பலர் கலந்துகொள்கிறார்கள்.
இறந்துபோன விவசாயி, போராட்டக்களத்தில் எலக்ட்ரீசியனாக பணிபுரிந்ததாகவும், இதற்காக பல மாதங்களாக சம்பளம் எதுவும் வாங்கவில்லை என்றும் தகவல் வெளியாகி உள்ளது. இரண்டு மாதங்களுக்கு முன்பு அவரது மகன் திருமணத்தில் கலந்துகொள்ளவதற்கு கூட கிராமத்திற்கு செல்லவில்லையாம்.